வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:07:48 (07/12/2018)

`ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டுவருபவர்களை வீழத்த வேண்டும்” - நாஞ்சில் சம்பத்!

`ஒற்றைக் கலாசாரத்தைக் கொண்டுவர முயல்கிறவர்களை, அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.  அவர்களிடம்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய காலம் இது' என நாஞ்சில் சம்பத் கூறினார்.

நாஞ்சில் சம்பத்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் திருச்சி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6 -ம் தேதி இடிக்கப்பட்டது. அந்த வழிபாட்டுத் தலத்தை இடித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். மீண்டும் அந்த இடத்தில் மசூதியைக் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், திருச்சி அண்ணாசிலை அருகே நடந்த  ஆர்ப்பாட்டத்தில், அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆர்பாட்டம்

த.மு.மு.க மாவட்ட தலைவர் முகமது நபி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் மாநிலப் பொருளாளர் உமர் ஆகியோர் பங்கேற்றனர். இதில், நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், "இந்தியாவில் ஒற்றைக் கலாசாரத்தை க்கொண்டுவரத் துடிப்பவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருந்து, வரக்கூடிய காலங்களில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து அவர்களை வீழ்த்த சூளுரைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன. ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அதேபோல, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க