ஒரிஜினல் வேண்டாம்... டிஜிட்டல் போதும்... ” வாகன ஓட்டிகள் வயிற்றில் பால் வார்த்த ஹைகோர்ட் | No need to carry physical copies of driving licence, other vehicle documents says Madras HC

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:08:16 (07/12/2018)

ஒரிஜினல் வேண்டாம்... டிஜிட்டல் போதும்... ” வாகன ஓட்டிகள் வயிற்றில் பால் வார்த்த ஹைகோர்ட்

'இனிமேல், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை'. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம்

சில மாதங்களுக்கு முன், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், வாகன ஓட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதே சுற்றறிக்கையில், டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்துப் பயன்படுத்தலாம் என்றும், இன்னொரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. இதை தமிழக அரசும் நடைமுறைப்படுத்தியது. ஆனால், ”டிஜிட்டல் ஆவணங்களைப் பல இடங்களில் போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதில்லை” என்று வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.

லைசன்ஸ்

இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

”அதென்ன டிஜிட்டல்?” என்று குழம்ப வேண்டாம். மத்திய அரசு,  ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், ’டிஜிலாக்கர்’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அந்தச் செயலியை டவுண்லோட் செய்துகொள்ளலாம். டவுண்லோட் செய்ததும், செயலியில் ஆதார் எண்ணைப் பதிவிட்டு இணைக்க வேண்டும். இது கட்டாயம். அதற்குப் பிறகு, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி. புக் போன்ற ஒரிஜினல் ஆவணங்களை ’ஸ்கேன்’ செய்து, டிஜிலாக்கர் செயலியில் சேகரித்துவைத்துக்கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு, அதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.