`கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது' - நெல் ஜெயராமனுக்காக உருகும் நண்பர்! | Nel Jayaraman Funeral held in native place on today

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:14 (07/12/2018)

`கடைசி வரை அவரின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டது' - நெல் ஜெயராமனுக்காக உருகும் நண்பர்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழி வந்தவர். 174 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துளார். இந்த நெல் ரகங்களை மற்றவர்களும் உற்பத்திசெய்ய வேண்டும், இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக, வருடா வருடம் திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா மற்றும் கருத்தரங்குகள் நடத்திவந்தார். அதுமட்டுமின்றி, வேளாண் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சிகளும் கொடுத்து வந்தார். 

நெல் ஜெயராமன்

இதற்கிடையே, கடந்த ஓராண்டு காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நண்பர் இல்லத்தில் வைக்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிசெலுத்தினர்.

நெல் ஜெயராமன்

இதைத் தொடர்ந்து, அமரர் ஊர்தி மூலம் நெல் ஜெயராமனின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்திற்கு இரவு  9.30 மணி அளவில் கொண்டுவரப்பட்டது. இதற்கான செலவு மற்றும் ஜெயராமின் மகன் சீனிவாசனுடைய படிப்புச் செலவு என அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். 

தற்போது, கட்டிமேட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான உறவினர்கள், கிராம மக்கள், விவசாயிகள் எனப் பல தரப்பினரும் நெல் ஜெயராமனின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இன்று மதியம் ஒரு மணி அளவில், நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம் கருணாநிதி

இதற்கிடையே, நெல் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலிசெலுத்த வரும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த மரக்கன்றுகளை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரம் கருணாநிதி மக்களுக்கு அளித்துவருகிறார். ஏன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அளிக்கப்படுகிறது என மரம் கருணாநிதியிடம் கேட்டோம். ``நானும் நெல் ஜெயராமனும் நண்பர்கள். நாங்கள் பேசும்போதெல்லாம்,  'மரங்களை அதிகமா வளர்க்க எனக்கு ஆசை' என்பார்.

மரம் கருணாநிதி

2018 முதல் 2020-க்குள் 1லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கணும் என்று ஆசைப்பட்டார். ஆனால் இன்று, அந்த ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. அவரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றவே, தற்போது நெல் ஜெயராமனுக்கு அஞ்சலிசெலுத்த வரும் மக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிவருகிறோம். 6,100 மரக்கன்றுகள் வழங்க இருக்கிறோம்" என மரம் கருணாநிதி உருக்கமாகக் கூறினார்.