வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (07/12/2018)

கடைசி தொடர்பு:12:47 (07/12/2018)

` கூட்டணிக்காக வலியப் போக வேண்டாம்!'  - மோடி எதிர்ப்புக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன், வைகோ போன்ற மத்திய அரசு எதிர்ப்பாளர்களுக்கு இது புரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது. நம்முடைய நடவடிக்கைகள் மூலமாக அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள்.

` கூட்டணிக்காக வலியப் போக வேண்டாம்!'  - மோடி எதிர்ப்புக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி

` மத்திய பா.ஜ.க அரசை எதிர்க்கத் தயாராகி வருகிறார் முதல்வர்' என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள். ` கூட்டணிக்கு வாருங்கள் என பா.ஜ.க நிர்வாகிகள் நேரடியாகக் கேட்காதபோது, நாம் ஏன் வலியப் போய் நிற்க வேண்டும்?' எனவும் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

மோடி, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 3-ம் தேதி மதியம் சபாநாயகர் தனபாலைச் சந்திக்கக் சென்றனர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள். இந்த சந்திப்பின்போது, சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கொறடா விஜயதரணி உட்பட ஏழு எம்.எல்.ஏ-க்கள் உடன் இருந்தனர். அப்போது, `கஜா புயல் பாதிப்பு, மேக்கே தாட்டு விவகாரம் என விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவையை உடனே கூட்டுங்கள்' என சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். இதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்துக் கோரிக்கை வைத்தனர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள். இதன் தொடர்ச்சியாக நேற்று சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டினார் சபாநாயகர். இந்தக் கூட்டத்தில் மேக்கே தாட்டு அணை விவகாரம் தொடர்பாக, முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர். 

இவர்களுக்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ` மத்திய நீர்வளக் குழுமம், தமிழகம் தெரிவித்த மறுப்புகளைப் பொருட்படுத்தாமல் மேக்கேதாட்டுவில் புதிய அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சமநிலையில் வைத்துப் பார்க்க வேண்டிய மத்திய அரசு, காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை பலமுறை எடுத்துரைத்தும் அதைக் கருத்தில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது. ஏற்கெனவே, பெங்களூரு நகரின் குடிநீர் தேவை உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக 14.75 டி.எம்.சி நீரை கர்நாடகாவுக்கு கூடுதலாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. அதன்பின், பெங்களூருவின் குடிநீர் தேவைக்கென 67 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது. இது, தமிழகத்தை பாலைவனமாக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும். இதற்கு துணைபோகும் மத்திய நீர்வள குழுமத்தின் செயல் கண்டிக்கத்தக்கது'  எனக் கொதிப்பை வெளிப்படுத்தினார். இறுதியாக, `தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது' என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணியுடன்

மத்திய அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்துப் பேசிய அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகி ஒருவர், `` கஜா புயல் பாதிப்பு தொடர்பாக, பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் முதல்வர். இதன்பேரில் மின் சீரமைப்புப் பணிகள், தற்காலிக நிவாரணம் என 500 கோடி ரூபாய் அளவுக்கு மட்டும் மத்திய அரசு நிதியை ஒதுக்கியது. முதல்வர் முன்வைத்த 15 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஒதுக்குவது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. `நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரையில் பொறுமையாக இருங்கள்' என விளக்கம் மட்டும் கொடுத்திருக்கிறார் அளித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த வேதனையை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி" என்றவர், 

தலைமை செயலகம்

`` பா.ஜ.கவை எதிர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார் என்பதைத்தான் நேற்றைய அவரது சட்டமன்றப் பேச்சு காட்டுகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேரும் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது. கஜா புயல் பாதிப்பு நிவாரணம் தொடர்பாக, பிரதமரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. `இந்த சந்திப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை' என ஆதங்கப்பட்டார் முதல்வர். கூட்டணி தொடர்பாக மத்திய பா.ஜ.க அரசு எதையும் தெளிவுபடுத்தவில்லை. மற்ற கட்சிகள் எல்லாம் மோடிக்கு எதிராக வரிசைகட்டிக் கொண்டு நிற்கின்றன. எனவே, அ.தி.மு.க-வும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

அ.தி.மு.கவினர் கூட்டம்

இதைப் பற்றி நிர்வாகிகளிடம் விவாதித்த முதல்வர், ` மாநில உரிமையை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மோடியா..எடப்பாடியா என்ற பிரசாரம், அ.தி.மு.க-வுக்கு லாபத்தைக் கொடுக்கும். கூட்டணி வேண்டும் என்றால், அவர்கள் நம்மைத் தேடி வரட்டும். காவிரி பிரச்னையில் நாம் உண்ணாவிரதம் இருந்தோம். மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன், வைகோ போன்ற மத்திய அரசு எதிர்ப்பாளர்களுக்கு இது புரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது. நம்முடைய நடவடிக்கைகள் மூலமாக அவர்கள் நம்மைப் புரிந்து கொள்வார்கள். கூட்டணிக்கு வாருங்கள் என மத்திய பா.ஜ.க அரசு கேட்காதபோது, நாம் ஏன் வலியப் போய் அவர்களிடம் நிற்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், சபையைக் கூட்டுவது தொடர்பாக நம்மிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, உடனே சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டியதும் ராஜதந்திர நடவடிக்கைதான்' எனப் பேசியிருக்கிறார்.