வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (07/12/2018)

கடைசி தொடர்பு:13:34 (07/12/2018)

நடிகர் `பவர் ஸ்டார்' சீனிவாசன் திடீர் மாயமான பின்னணி!

 பவர் ஸ்டார் சீனிவாசன்

சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில், நடிகர் `பவர் ஸ்டார்' சீனிவாசன் மாயமானதாக அவரின் மனைவி புகார் கொடுத்தார். சில மணி நேரத்திலேயே புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

`கண்ணா லட்டு திங்க ஆசையா', `கோலிசோடா' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் `பவர் ஸ்டார்' சீனிவாசன். காமெடி கதாபாத்திரங்களில் நடித்த பவர் ஸ்டார், குறுகிய காலத்தில் பிரபலமானார். நடிகர் ரஜினிக்கு போட்டி என பேட்டிகளில் கூறிவரும் அவர் மீது குற்றச்சாட்டுக்களும் குவிந்தன.  தமிழக, டெல்லி காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளால் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நேரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பவர் ஸ்டார் சீனிவாசன் பங்கேற்கப்போவதாக தகவல் வெளியானது. ஆனால், அவர் சில காரணங்களுக்காக பங்கேற்கவில்லை. 

 பவர் ஸ்டார் சீனிவாசன்

சமீபத்தில்,  நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள  வழக்குகளை சட்டரீதியாக சந்தித்துவரும் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என்று அவரின் மனைவி ஜூலி நேற்று அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில், அண்ணா நகர் போலீஸார்  பவர் ஸ்டார் சீனிவாசனைத் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர், ஊட்டியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனால் சில மணி நேரத்தில் புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என்று புகார் கொடுத்த ஜூலியிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். ``வீட்டில் என்னிடம் சொல்லாமல் அவர் சென்றுவிட்டார். நான் போன் செய்தபோது  அவர் எடுக்கவில்லை. இந்தப் பயத்தில்தான் அவரைக் காணவில்லை என்று புகார் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்றபிறகு, அவர் ஊட்டியில் இருப்பதாக போனில் என்னிடம் தெரிவித்தார்'' என்று கூறியுள்ளார். 

போலீஸாரிடம் கேட்டபோது, ``நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் டெல்லி, தமிழக போலீஸார் அவரை கைதுசெய்திருக்கலாம் என்ற சந்தேகம் அவரின் மனைவி ஜூலிக்கு ஏற்பட்டிருக்கலாம். புகார் கொடுத்த சில மணி நேரத்திலேயே பவர் ஸ்டார் இருக்கும் இடம் தெரிந்துவிட்டதாகக் கூறினார். இதனால், அந்தப் புகார்குறித்து விசாரிக்கவில்லை" என்றனர்.