வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (07/12/2018)

கடைசி தொடர்பு:13:55 (07/12/2018)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்கு தடை - உச்சக்கட்ட பதற்றத்தில் தஞ்சைப் பெரியகோயில்!

உலகப் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் விஞ்ஞான பைரவ என்ற பெயரில் இன்று மாலையும், நாளையும் இரண்டு தினங்கள் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதற்காகப் பெரியகோயில் உட்புறத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பணம் வசூல்செய்து, பராம்பர்யச் சின்னமான பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,  தடை விதிக்க வலியுறுத்தியும் இன்று பெரிய கோயிலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ரவிசங்கர் நிகழ்ச்சி

இதனால் பெரிய கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் கடும் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பேரிகார்டர் வைத்தும் போராட்டக்காரர்கள் உள்ளே வராதபடி தடுத்திருந்தனர். இந்த நிலையில், ராஜ ராஜ சோழன் சிலை அருகே தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ''பெரிய கோயிலைப் பாதுகாப்போம், ரவிசங்கரை விடமாட்டோம், இந்த நிகழ்ச்சிக்கு உடனே தடை வழங்கு'' எனக் கோஷமிட்டனர். 

போராட்டம்

அவர்களை போலீஸார் கைதுசெய்ய முயன்றனர். நாங்கள் ரவிசங்கர் நடத்தும் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போராட்டம் நடத்துகிறோம். காவல் துறைக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தோம். நீங்கள் எங்களைக் கைது செய்கிறீர்களே என வாதிட்டனர். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத காவல் துறையினர், அவர்களைக் கைதுசெய்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம்.

தஞ்சை பெரிய கோவில்

``உலக புராதனச் சின்னங்களில் ஒன்றாகத் திகழும் பெரிய கோயிலில், தனியார் அமைப்பு யோகா நிகழ்ச்சி நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதிபெற்று ஏற்பாடுசெய்துள்ளனர். தமிழக அரசின் தொல்லியல் துறையிடமும், காவல் துறையிடமும் எந்த அனுமதியும் பெறவில்லை. மேலும், இதற்கு ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ள இந்த நிகழ்ச்சியால், கோயில் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 

தஞ்சை பெரிய கோவில்

வெளி ஆட்கள் யாரும் பார்க்காத வகையில் பந்தலை முழுவதுமாக துணிகொண்டு அடைத்திருந்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நான்கு புறமும் போடப்பட்டிருந்த அடைப்புகளை எடுத்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு தமிழக அரசு உடனே தடை விதிக்க வேண்டும். 35 பேர் கலந்துகொண்ட போராட்டத்துக்கு 200 போலீஸார் பாதுகாப்பிற்குப் போட்டுள்ளனர். மேலிட உத்தரவால் போலீஸ் அவர்களுக்கு  ஆதரவாகச் செயல்படுகிறது" என்றனர்.

போராட்டம்

 வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``முறையாக எல்லா அனுமதியும் பெற்றுள்ளோம். திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சி நடக்கும்" என்று கூறி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். இதனால், பெரிய கோயில் வளாகத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சி நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க