சோவிடம் சொன்னதை நிறைவேற்றிய ஜெயலலிதா! - சோ நினைவு தினப் பகிர்வு | A tribute to Cho Ramaswamy on his Death Anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (07/12/2018)

கடைசி தொடர்பு:15:45 (07/12/2018)

சோவிடம் சொன்னதை நிறைவேற்றிய ஜெயலலிதா! - சோ நினைவு தினப் பகிர்வு

சோவிடம் சொன்னதை நிறைவேற்றிய ஜெயலலிதா! - சோ நினைவு தினப் பகிர்வு

சோ நினைவு தினம் இன்று. ஜெயலலிதா, சோ விடம் சொன்னதைப் போலவே அவருக்கு இரண்டுநாள் முன்னர் மரணமடைந்தார். ஜெயலலதா இறந்த 30 மணி நேரம் கழித்து சோவும் மரணமடைந்தார்.

ஜெயலலிதா இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு சோ, உடல்நலக் குறைவால் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை நலம் விசாரிக்க அப்போலோ சென்றார் ஜெயலலிதா. அப்போது நடந்த உரையாடல் உணர்ச்சி மிகுந்தது. ``உடல் நிலையை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்... நல்லா ரெஸ்ட் எடுங்க... நீங்க ரொம்ப வருஷம் வாழணும். உங்களுக்கு முன்னால நான் போயிடணும். எனக்குப் பின்னாடிதான் நீங்க போகணும்’’ என சோவிடம் ஆறுதல் சொன்னார் ஜெயலலிதா. `அப்படி எல்லாம் பேசக் கூடாது’ என்று கண்டித்தார் சோ. ஆனால், ஜெ.சொன்னதுதான் இறுதியில் நடந்தது. ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு நாள் கழித்து சோவும் இந்த உலகத்தைவிட்டுப் பிரிந்தார்.

சோ விடம் நலம் விசாரித்த ஜெயலலிதா

துக்ளக்கில் வெளிவரும் `கேள்வி - பதில்’ பகுதிக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் தவறாமல் பதில்களைக் கொடுத்துவிடுவார் சோ. வேலைகள் இருந்தால் மட்டுமே வியாழக்கிழமை வரை தள்ளிப் போகும். ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சையில் இருந்தபோது சோவும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு முன்புகூட, துக்ளக் கேள்வி-பதில்களை கொடுத்துவிட்டுத்தான் போனார். தனது மருமகள் சித்ராவை அழைத்து வாசகர் கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்திருக்கிறார். துக்ளக் ஆரம்பித்த காலத்திலிருந்து கேள்வி - பதில் பகுதி கடைசி நேரத்தில் பிரின்டுக்குப் போன வரலாறு கிடையாது. அதுதான் முதல்முறை. உடல்நலம் குன்றி வீட்டில் இருந்த காலகட்டத்தில்கூட ஒவ்வொரு இதழும் அவரின் பார்வைக்குப் போய் ஓகே ஆனபிறகுதான் பிரின்ட்டுக்கே போகும்.

அப்படித்தான் அவர் இறப்பதற்கு முன்பு வெளியான துக்ளக் இதழை ரெடி செய்துவிட்டு எடிட்டரிடம் `ஓகே’ வாங்க சப் எடிட்டர்கள் 2016 டிசம்பர் 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று அப்போலோ போனார்கள். அதே தினத்தில்தான் ஜெயலலிதா சீரியஸ் எனச் செய்திகள் பரவின. ``நிறைய கெடுபிடிகள் சார்... நாங்க போராடித்தான் இங்கே வந்தோம்’’ என சோவிடம் சொல்லியிருக்கிறார்கள் சப்- எடிட்டர்கள். ``யாராவது வி.ஐ.பி-க்கள் வருகிறார்களா என்ன?’’ எனக் கேட்டுவிட்டுப் பக்கங்களைப் பார்த்து திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார் சோ. ``கடைசி நேரத்தில் பதில்களை கொடுத்திருக்கீங்க... வழக்கம் போல இருந்தது சார்’’ என சப் எடிட்டர்கள் சொல்ல, ``அப்ப இம்ப்ரூவ்மென்டே இல்லை என்கிறீர்களா?’’ என இரட்டை அர்த்தத்தில் கேட்டுவிட்டு, ``சோவின் கேள்வி பதில்கள் வருவதை போஸ்டரில் போடுங்க’’ எனவும் சொல்லியிருக்கிறார். `சோவின் கேள்வி பதில்கள்’ அதுவரை போஸ்டரில் வந்ததே கிடையாது. ``அவ்வளவுதான் சார்... இனிமேல் என்ன இருக்கு சார்’’ என்றபடியே சப் எடிட்டர்களை அனுப்பி வைத்திருக்கிறார் சோ.

சோ ராமசாமி - ஜெயலலிதா

``இம்ப்ரூவ்மென்ட் இல்லையா?’’ என அவர் எதற்காகக் கேட்டார் எனத் தெரியவில்லை. அதன்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமே இல்லாமல் போய்விட்டது. உடனே ஐ.சி.யூ-வுக்கு சோ மாற்றப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையும் சீரியஸ் ஆகிக் கொண்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பேரின் உயிர்களும் போராடிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா உயிர் பிரிந்தபோது அந்தச் செய்தி சோவின் நினைவுக்குப் போய்ச் சேரவில்லை. அடுத்த 30 மணி நேரத்தில் சோவின் உயிரும் அவர் உடலைவிட்டுப் பிரிந்து போனது.

``உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்!” என்கிற ஜெயலலிதாவின் வார்த்தைகள் சோவின் ஆன்மாவுக்குப் போய் சேர்ந்திருக்குமா? 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்