வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:15 (07/12/2018)

மக்கள் கண்ணீர் அஞ்சலி - சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்!

இயற்கை வேளாண் ஆர்வலர் நெல் ஜெயராமனின் உடல், அவரின் சொந்த ஊரான கட்டிமேட்டில் தகனம் செய்யப்பட்டது.

நெல் ஜெயராமன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர், இயற்கை விவசாய மீட்புப் போராளி நெல் ஜெயராமன். இவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக இருந்தார். இதுவரை 174 பாரம்பர்ய நெல் வகைகளை மீட்டு, இயற்கை விவசாயத்தை 21-ம் நூற்றாண்டில் மீட்டுருவாக்கியவர். 

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் நேற்று (06.12.2018) காலை 05.10 மணியளவில் உயிரிழந்தார். இவரது உடல், சென்னையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது‌. பல்வேறு கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலிசெலுத்தினர்.

நெல் ஜெயராமன்

நேற்று இரவு, அவரது உடல் சென்னையிலிருந்து அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.  அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று (07.12.2018) காலை, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர், நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.

அஞ்சலிக்குப் பின்னர் பேசிய அமைச்சர் காமராஜ், ``அவரின் மருத்துவச்செலவை அரசு ஏற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' எனத் தெரிவித்தார். திருச்சி சிவா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``தமிழ் இலக்கியத்திற்கு உ.வே.சா, சி.வை.தா ஆகியோரின் பணியைப் போல, தமிழக வேளாண் உலகிற்கு நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் பணி போற்றத்தக்கது" என்றார்.

நண்பகல் 12 மணியளவில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. 12.30 மணியளவில் இறுதிஊர்வலம் தொடங்கியது. 1 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த ஊருக்கு அவரது உடலைக் கொண்டு வரும் செலவையும், அவர் மகனின் கல்விச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நெல் ஜெயராமன்

ஜெயராமனின் மறைவு, தமிழகத்துக்கும் வேளாண் துறைக்கும் மிகப்பெரும் இழப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க