வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (07/12/2018)

கடைசி தொடர்பு:14:41 (07/12/2018)

`குடித்துவிட்டால் சைக்கோ' - இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவான தந்தை

பெற்ற பிள்ளைகளையே கொன்றுவிட்டு தந்தை தலைமறைவான சம்பவம், கோவை வாசிகளை அதிரச் செய்துள்ளது.

பத்மநாபன் - செல்வராணி

கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பத்மநாபன் - செல்வராணி தம்பதி. 45 வயதான பத்மநாபன், மார்க்கெட்டிங் துறையில் வேலைபார்க்கிறார். இவர்களுக்கு ஹேமவர்ஷினி (15), ஸ்ரீஜா(8) என்ற இரண்டு பெண் குழந்தைகள். மனைவி, குழந்தைகள் மற்றும் தனது அம்மா பிரேமா ஆகியோருடன் அந்தப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார்.

செல்வராணிக்கு  ஏற்பட்ட உடல்நலக் கோளாறால், ஒரு கை மற்றும் கால் முடங்கிப்போயிருக்கிறது. ஆகையால், கடந்த இரண்டு ஆண்டுகளாக  நடக்கச் சிரமப்பட்டுவந்துள்ளார் செல்வராணி. பத்மநாபனின் அம்மா பிரேமாதான்  குழந்தைகளைக் கவனித்துவந்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே பந்தமனாபனுக்கும் செல்வராணிக்கும் ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. பத்மநாபன் குடிக்கு அடிமையானதால், வீட்டில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பந்தமநாபன், செல்வராணியுடன் தகராற்றில் ஈடுபட்டு அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிங்காநல்லூர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக பத்மநாபன் வீட்டுக்கு வந்த போலீஸார், இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, ``இப்போ நீங்க இங்க இருக்கிறது பாதுகாப்பு இல்ல. உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு காலையில ஸ்டேஷன் வந்திருங்க" என்று செல்வராணியிடம் சொன்ன போலீஸ், `நீயும் காலையில ஸ்டேஷன்ல இருக்கணும்னு' பத்மநாபனிடம் சொல்லி பிரச்னையை முடித்துவிட்டுச் சென்றது போலீஸ். வெள்ளளூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குக் கிளம்பிய செல்வராணி, தனது குழந்தைகளையும் கூப்பிட்டுள்ளார். ஆனால் குழந்தைகளோ… ``அப்பா போதையில் இருக்கார். ஏதாச்சும் ஆகிரும்" நாங்க அப்பாகூடவே இருக்கிறோம் என்று செல்வராணியுடன் செல்ல மறுத்துள்ளனர். ஆகையால், செல்வராணி மட்டும் தனியாகத் தனது தாயார் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கொலை

பிரேமாவும்  மகனின் அடிக்குப் பயந்துகொண்டு வீட்டுக்கு வெளியே வந்து படுத்து உறங்கிவிட்டார். விடிந்ததும்  வீட்டுக்குள் சென்ற பிரேமாவை கடுமையாகத் திட்டி வெளியில் தள்ளியுள்ளார். ஆகையால், பத்மநாபன் வெளியே சென்ற பிறகுதான் பிரேமா வீட்டுக்குள் சென்றுள்ளார். படுக்கையில் கிடந்த குழந்தைகள் இருவரும் தூங்குவதாக நினைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் குழந்தைகள் அசைவற்று இருந்ததால் ,அருகில் சென்று அவர்களை எழுப்பிய பிரேமா அதிர்ச்சியில் உறைந்துபோனார். இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக  சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து,  தலைமறைவாக உள்ள பத்மநாபனை தீவிரமாகத் தேடிவருகிறது போலீஸ். குழந்தைகள் தூங்கும்போது தலையணையை வைத்து அழுத்திக் கொலை செய்திருக்கக்கூடும் என்று காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ``குடித்துவிட்டால் பத்மநாபன் சைகோ போல நடந்துகொள்வார். ஆனால், எவ்வளவு போதையில் இருந்தாலும் குழந்தைகள்மீது பாசமாகவே  இருப்பார். ஆனால், பத்மநாபனே குழந்தைகளைக் கொன்றது அதிர்ச்சியாக இருக்கிறது" என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.