வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (07/12/2018)

கடைசி தொடர்பு:16:15 (07/12/2018)

``மேக்கே தாட்டூவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்’’ - நாராயணசாமி சபதம்!

காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு, திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து இன்று காலை காரைக்காலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாராயணசாமி

 

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரிப்படுகையில் மேக்கே தாட்டூ உட்பட எந்த இடத்திலும் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் நேற்று, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதுவை மாநிலத்தின் எதிர்ப்பைக்காட்ட காவிரி நீரால் பயன்பெறும் காரைக்காலில், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாராயணசாமி

 

இதில் கலந்துகொண்டு பேசிய, முதல்வர் நாராயணசாமி, ``காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்குகின்ற, காவிரி நீரைப் பாதுகாக்கவும், மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்கும், திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், நமது மாநிலத்தின் எதிர்ப்பைக் காட்டவே, இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். கடந்த 30 ஆண்டுக்கால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, புதுவை மாநிலத்துக்கு 7 டி.எம்.சி காவிரி நீர் கிடைக்க உச்ச நீதிமன்றம் மூலம் வழிவகை பிறந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த அடுத்த 45 நாள்களுக்குள், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைத்திட வேண்டும். 

மேக்கே தாட்டூ

ஆனால், இன்று வரை அதை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேக்கே தாட்டூவில் கர்நாடக அரசு அணை கட்ட புதுவை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கட்சி பாகுபாடின்றி புதுவை மக்கள் அனைவரது எதிர்ப்பையும் காட்டும் விதத்தில் விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும், அனுப்பி வைக்க இருக்கிறோம். காவிரி நீர் பிரச்னையில் புதுவை அரசின் உரிமையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். நமது ஒட்டுமொத்த எதிர்ப்பும் மோடியின் செவிகளைச் சென்றடைய வேண்டும். ஒன்றுபடுவோம். வெற்றி பெறுவோம்" என்றார்.