வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (07/12/2018)

`கன்னியாகுமரி தமிழகத்தில் இல்லை என முதல்வர் கூறட்டும்...' - பொன்.ராதாகிருஷ்ணன் ஆதங்கம்

மேகதாது விஷயத்தில் தமிழக முதல்வர் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியைக் கர்நாடகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பாதது முதல்வர் செய்த தவறு என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

`மேகதாது விஷயத்தில் தமிழக முதல்வர் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியைக் கர்நாடகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பாதது முதல்வர் செய்த தவறு' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மேகதாது அணை பிரச்னையில் அணை கட்டுவதை தமிழக பா.ஜ.க எதிர்க்கிறது. மேகதாது அணை குறித்த முழு ஆய்வறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் மேகதாது கட்ட வேண்டும் என்ற தொடர் முயற்சியில் உள்ளது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, கர்நாடக மாநிலத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். எனவே, மேகதாது சம்பந்தமான முழு ஆய்வுகள் எடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். மேகதாது விஷயத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒருபுறம் இருக்கட்டும். காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் இந்த விஷயத்தில் ஏன் வேஷம் போடுகிறார்கள். மேகதாது விஷயத்தில் தமிழக முதல்வர் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியைக் கர்நாடகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அனுப்பாதது முதல்வர் செய்த தவறு.

பொன்.ராதாகிருஷ்ணன்

இயற்கை பேரிடர்களின்போது மற்ற மாநிலங்களுக்குக் கொடுக்கும் விகிதாசாரத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. மத்திய ஆய்வுக்குழு அறிக்கை, மத்திய அமைச்சர் குழு அறிக்கையில் என்ன கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய குழு ஆய்வு செய்து அதற்குத்தக்க நிதி கொடுக்கப்படும். குட்கா விவகாரம் மட்டுமல்ல எந்த ஊழலாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா விஷயத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் அயல் நாட்டவர்கள் வந்து உளவு பார்க்கும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

பொன்.ராதாகிருஷ்ணன்

நாட்டைவிட மேலானவர்கள் யாரும் இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இருக்கிறதா, இல்லையா? இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் நாட்டுக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். புகைப்படம் எடுத்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் 18 லட்சம் மக்களையும் முட்டாள் ஆக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். வெளிநாட்டவர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். என் நாட்டு மக்களாக இருந்தால் நான் மதிப்பேன். அயல் நாட்டவர்கள் விருந்தினராக வந்தால் வரவேற்பேன். அவர்கள் நம்மை அழிக்க வந்தால் அவர்களுக்கு மகுடம் சூட்டி அழகுபார்க்க முடியுமா. தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லை என முதல்வர் கூறட்டும்" என்றார்.