தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்குத் தடை இல்லை! - தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு | supreme court refuses to ban cbi enquiry in thoothukudi gunfire incident

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/12/2018)

கடைசி தொடர்பு:17:40 (07/12/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்குத் தடை இல்லை! - தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும். சி.பி.ஐ., விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துக் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாகச் சென்றனர். இந்த நிலையில், திடீரெனக் கலவரம் ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 12 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அடுத்தநாள் அண்ணாநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள தென்பாகம், வடபாகம், சிப்காட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த மே மாத இறுதியில் இந்த வழக்குகளில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஜூன் 5-ம் தேதி இந்த வழக்குகள் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதுரை சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணையையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் போலீஸார் பதிவு செய்துள்ள 173 வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்து விசாரணை செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த அக்டோபர் 8-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.ஐ. குழுவிடம் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸார் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையைத் துவக்கி நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் சி.பி.ஐ. விசாரணை உத்தரவு தீர்ப்புக்கு எதிராக ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமிக்கப்பட்டுள்ள ஒருநபர் ஆணையம் விசாரணையை நடத்தி வருகிறது. அத்துடன், சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவ்வழக்குகள் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸரே தொடர்ந்து விசாரணையை நடத்திட உத்தரவிட வேண்டும்” என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

இவ்வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பிறகு, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததுடன், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு சி.பி.ஐ., தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க