சுட்டி விகடன் நடத்திய `மதுரை 200' - வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு | Chutti vikatan's Madurai 200 programme

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (07/12/2018)

கடைசி தொடர்பு:17:08 (07/12/2018)

சுட்டி விகடன் நடத்திய `மதுரை 200' - வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

`மதுரை 200’ என்ற தலைப்பில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படுகிறது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு

சுட்டி விகடன் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து, `மதுரை 200’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியது. இதில் மதுரை மாவட்டத்தைப் பற்றிய 200 முக்கிய தகவல்களை எளிமையாகத் தொகுத்து மாணவர்களுக்கு, சுட்டி விகடன் இணைப்பு புத்தகமாக வழங்கி அதிலிருந்து 75 கேள்விகள் கேட்கப்பட்டுத் தேர்வை நடத்தி முடித்தது. இந்தத் தேர்வில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசு பெறத் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள, மதுரைக் கல்லூரி சங்கரைய்யர் அரங்கில் நாளை காலை 9 மணி முதல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தேர்வு எழுதும் மாணவர்கள்

இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.நடராஜன், மதுரை மாநகராட்சி ஆணையர் மரு.அனீஷ் சேகர், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசீர்வாதம், ரோட்டரி கிளப் ஆர்.வி.என்.கண்ணன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி உள்ளிட்ட நபர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளனர். அரசு பள்ளியைச் சேர்ந்த 1,250 மாணவர்களுக்குத் தேர்வு எழுத, அம்மா எலிசபெத் ஜெயசீலினி அறக்கட்டளை நிறுவனர் கிரம்மர் சுரேஷ் உதவி அளித்துள்ளார். மதுரையில் நடைபெறும் விழாவைப்போன்று சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுட்டி விகடன் மாணவர்களுக்குத் தங்களது மாவட்ட தகவலைத் தொகுத்துத் தேர்வு நடத்தியுள்ளது. இது தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இது போன்ற தேர்வு நடத்த உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்குத் தங்கள் மாவட்டத்தின் தகவல்களை அறிந்துகொள்ளவும், நீட் தேர்வு, அரசு போட்டித் தேர்வுகளுக்கு கலந்துகொள்ள உதவும். சுட்டி விகடன் விழா நடைபெறுவதையொட்டி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.