அகர்வால் குழு நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? - தமிழக அரசு காட்டமான விவாதம் | Sterlite hearing Adjourned to monday NGT

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (07/12/2018)

அகர்வால் குழு நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? - தமிழக அரசு காட்டமான விவாதம்

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கும் ஆலையையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்தது. 

இதைத்தொடர்ந்து தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு ஸ்டெர்லைட் ஆலையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காகச் சொன்ன காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மீண்டும் ஆலையைத் திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இதற்கான பதில் அறிக்கையைத் தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறி வழக்கை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசும் வேதாந்தாவும் தங்கள் வாதங்களை முன்வைத்தன. வழக்கின் கூடுதல் மனுதாரர்களான பேராசிரியர் பாத்திமா பாபுவும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் வாதிட அனுமதி அளிக்கப்படவில்லை. வேதாந்தா தரப்பு வாதத்தில், இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 36% தாமிரத்தை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தாமிரத்தை ஏற்றுமதி செய்த நாம் இப்போது இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தது. தமிழக அரசு தரப்பு வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இதைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் எதிர்க்க முடியாது. மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா, நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே இந்தக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழு இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஆலையை மூடியது தவறா என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆய்வுக்குழு தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின் நக்சலைட்டுகள் இருந்தனர் எனத் தெரிவித்த வேதந்தாவின் வாதத்தைத் தமிழக அரசு கடுமையாக மறுத்தது. இது ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமே எனவும் தெரிவித்தது. வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.