6 மாதத்தில் 6 யானைகள் பலி... என்ன நடக்கிறது மேகமலையில்? | Six elephants died in the last six months in Meghamalai

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:11 (07/12/2018)

6 மாதத்தில் 6 யானைகள் பலி... என்ன நடக்கிறது மேகமலையில்?

சுற்றுலாத்தலமாக இருக்கும் மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6 காட்டு யானைகள் பலியாகியிருப்பது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 மாதத்தில் 6 யானைகள் பலி... என்ன நடக்கிறது மேகமலையில்?

மேற்குத்தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் அழகிய பகுதிகளில் ஒன்று மேகமலை. மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளில் பல அரிய உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. சுற்றுலாத்தலமாக இருக்கும் மேகமலையில் கடந்த 6 மாதங்களில் 6 காட்டு யானைகள் பலியாகியிருப்பது வன விலங்கு ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியால்தான் யானைகள் உயிரிழந்தன என வனத்துறை சொன்னாலும், அதனை விசாரணை செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டது.

இதுவரை 6 யானைகள் பலி

கடந்த 18.6.2018-ல் தாய் யானை, தன் குட்டியுடன் உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5.9.2018 அன்று பெண் யானை ஒன்று அதே இடத்தில் பலியாகிக் கிடந்தது. யானைகளின் தொடர் பலிக்கு அங்கே தாழ்வாகச் செல்லும் உயர்மின் அழுத்தக் கம்பிதான் எனக் கூறியது வனத்துறை. உயர் மின் அழுத்தக் கம்பியை உயர்த்த வேண்டும் என வனத்துறை, மின்சாரத்துறைக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியது. அதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இருந்த பாறைகள் அகற்றப்பட்டு, தரைப்பகுதிக்கும், மின் கம்பிக்குமான தூரத்தை அதிகரித்தது வனத்துறை. ஆனால், அதற்கு அருகே செல்லும் மற்றொரு உயர் மின் அழுத்தக்கம்பியில் உரசிக் கடந்த நவம்பர் 26-ம் தேதி 2 பெண் யானைகள் பலியாகின. இதற்கு இடையில், கடந்த அக்டோபர் 20-ம் தேதி குட்டியானை ஒன்று மேகமலை தேயிலை தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது. மொத்தமாகக் கடந்த 6 மாதத்தில் மட்டும் 6 யானைகள் மேகமலை வனப்பகுதியில் பலியாகியுள்ளன.

Elephant

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகள் 

யானைகளின் தொடர் உயிரிழப்பு காரணமாக, மனோஜ்குமார் இமானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ``வனப்பகுதியில் 20 முதல் 30 அடி உயரத்தில்தான் மின் கம்பிகள் செல்ல வேண்டும் என்பது தேசிய வன விலங்கு வாரிய விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மேகமலையில் 7 அடி உயரத்தில்தான் மின் கம்பிகள் செல்கின்றன. பொதுவாக யானைகள், 11 முதல் 12 அடி உயரம் வரை வளரும். இதனால் யானைகள் இடம் பெயரும்போது மின் கம்பியில் உரசி உயிரிழக்கின்றன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வனப்பகுதிகளுக்குள் செல்லும் மின் கம்பிகளை முறைப்படுத்த வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பது குறித்து வனத்துறை முதன்மைச் செயலர், தமிழக மின்வாரியத் தலைவருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மேகமலையில் யானைகள் உயிரிழப்பு குறித்து மனுதாரர் சந்தேகம் எழுப்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அது குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வன உயிரினக் குற்றத்தடுப்பு குழுவினருக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்துதான் கடந்த நவம்பர் 26ம் தேதி 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகின.

மேகமலை யானை

சாட்டை எடுத்த நீதிமன்றம் 

4 யானைகள் பலியான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த சில வாரங்களிலேயே மேலும் 2 யானைகள் பலியான செய்தியை அறிந்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை) சார்பில், தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது மேகமலை வன உயிரினக் காப்பாளர் கலாநிதி நேரில் ஆஜரானார். யானைகள் உயிரிழப்பு குறித்து நீதிபதிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``ஜூன் மாதம் 2 யானைகளும், செப்டம்பரில் 1 யானையும்,  நவம்பரில் 2 யானைகளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தெரிவித்தார். தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு, மின் கம்பிகளை உயர்த்தக் கோரி மின்வாரியத்திற்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், ஜூன் மாதமே யானை உயிரிழந்த நிலையில், அதைத் தடுக்க கடிதம் எழுதுவது மட்டும் போதுமா எனக் கடிந்து கொண்டனர். இந்நிலையில் ஏற்கெனவே இது போன்ற வழக்கில், யானை உயிரிழப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதையடுத்து தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்வாரிய தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மேகமலை பகுதியில் யானைகள் உயிரிழந்ததை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பரிந்துரைகள் குறித்தும் மேகமலை வனக் காப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், மதுரை மின்வாரிய செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் வரும் டிசம்பர் 13-ல் மின் கம்பிகளை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Elephant dies

மின்சாரத்தை நிறுத்திய மின்சாரத்துறை 

யானைகளின் தொடர் பலி காரணமாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து வழக்கு விசாரணையில் இறங்கியது. வழக்கு விசாரணையில், தமிழகத்தில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக மின்வாரியத் தலைவர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில், தமிழக மின்வாரியத் தலைவர் சார்பாக நேற்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதைத் தடுக்க, உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் உயரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாகச் சுருளி -  கயத்தாறு மின் இணைப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகள் பலிக்கு என்ன காரணம்?

``மேகமலை வனப்பகுதியைக் கடந்து 2 உயர் மின் அழுத்தக் இணைப்புகள் செல்கின்றன. ஒன்று, லோயர்கேம்ப் மின் நிலையத்திலிருந்து கயத்தாறுக்கு. மற்றொன்று சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறுக்கு. குட்டியுடன் ஒரு பெண் யானையும், அதைத் தொடர்ந்து ஒரு பெண் யானையும் பலியானது லோயர்கேம்பிலிருந்து கயத்தாறு செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியால்தான். சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு செல்லும் உயர் மின் அழுத்தக்கம்பி தாக்கி கடந்த நவம்பர் 26-ம் தேதி இரண்டு பெண் யானைகள் பலியாகின. இந்த மின் இணைப்புகள் எல்லாம் 60-களில் போடப்பட்டவை. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், காலப்போக்கில் கம்பிகள் தாழ்ந்து போயின. ஏன் எனக் கேட்டால், ஒவ்வொரு போஸ்ட் கம்பத்துக்குக் கீழே இருக்கும் மரக்கிளைகளை அகற்ற மட்டுமே தங்களுக்கு அனுமதி கொடுத்ததாக வனத்துறை மீது குற்றம் சாட்டுகிறது மின்சாரத்துறை. வனத்துறையிடம் கேட்டால், காட்டுக்குள் செல்லும் மின் கம்பிகளை கண்காணிப்பதா எங்கள் வேலை என்கிறது. இரு அரசுத்துறைகளின் அலட்சியம் இன்று 6 யானைகளை மின்சாரத்திற்குக் காவு கொடுத்திருக்கிறது. இதற்கிடையில் மர்மமான முறையில் யானைகள் இறப்பதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 1-ம் தேதி வன உயிரினக் குற்றத்தடுப்புப் பிரிவு காப்பாளர் உமா, யானைகள் இறந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். இறந்தது அனைத்தும் பெண் யானைகள் என்பது கவலையளிப்பதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்று கண்டறிய வேண்டும். இயல்பாகவே மின்சாரம் தாக்கிதான் யானைகள் பலியாகின்றனவா அல்லது யானைகள் பலிகொடுக்கப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய வேண்டும்.” என்று கொதிக்கிறார்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வன விலங்கு ஆர்வலர்கள்.


டிரெண்டிங் @ விகடன்