சசிகலாவிடம் நேரில் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன? | Arumugasamy commission to enquire sasikala over Jayalalithaa's death: sources

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (07/12/2018)

சசிகலாவிடம் நேரில் விசாரணை - ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் என 130-க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களின் வாக்குமூலங்களும் பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. 

ஜெயலலிதா

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கமளிக்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் கோரப்பட்டது. இதையடுத்து, சசிகலா தரப்பில் 55 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற சசிகலா தரப்பின் கோரிக்கையையும் ஆணையம் ஏற்றது. 

சசிகலா

இந்தநிலையில், சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக ஆணையம் தரப்பில் இருந்து தமிழக உள்துறை மற்றும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆணையம் தரப்பில் விசாரித்தோம். ``சசிகலாவிடம் நேரில் விசாரிப்பது தொடர்பாகக் கடிதம் எதுவும் அனுப்பவில்லை. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை’’ என்றதோடு முடித்துக்கொண்டார்கள்.