`அந்தப் பெரும் தீ விபத்தை மறந்துவிட்டார்கள்!' - கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி | Srisri ravishankar's program shifted to private marriage hall

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:13 (07/12/2018)

`அந்தப் பெரும் தீ விபத்தை மறந்துவிட்டார்கள்!' - கல்யாண மண்டபத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சி

உலகப் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் விஞ்ஞான பைரவ என்ற பெயரில் இன்று மாலையும் நாளையும் இரண்டு தினங்கள் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகளை நடத்த இருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இன்று போராட்டமும் நடைபெற்றது. இதனால் பெரிய கோயில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

இந்த நிலையில் வெங்கட் என்பவர் இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதியம் மனு விசாரணைக்கு வந்த நிலையில் நிகழ்ச்சி நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். மேலும், பெரிய கோயில் வளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலையும் பிரிக்க உத்தரவிட்டது. இதற்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது எனக் கலெக்டர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.

வாழும் கலை அமைப்பினர்

இதையடுத்து வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கும் எனக் கூறியதோடு நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் காவேரி திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாட்டை செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்காகப் பணம் கட்டியவர்கள் வரத் தொடங்கியதால் பரபரப்பாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சி

இது குறித்து போராட்டக்காரர்களிடம் பேசினோம், ``இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்ததே பெரும் தவறு. அதோடு அவர்கள் இதற்காக பெரிய கோயில் உள்புறத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்ததோடு கலந்துகொள்பவர்களிடம் பணம் வசூலும் செய்தனர். உலகப் புராதன சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில், தனியார் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் கோயிலும் பொது மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியானது. ஏன் என்றால் சுமார் 20 வருடத்துக்கு முன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டு பலர் உயிர் இழந்தனர். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிவிட்டது மத்திய தொல்லியல் துறை. ஆனால், நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது மகிழ்ச்சியைத் தருவதோடு கோயில் பாதுகாப்பையும் உறுதிசெய்துள்ளது’’ என்றனர்.

யோகா நிகழ்ச்சி

வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள், ``இந்த நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி வாங்கியிருந்தோம். ஆனாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். அதன் படி நிகழ்ச்சி நடத்த இடைக்காலத் தடை அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம். அதை ஏற்று இன்று திட்டமிட்டபடி தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்துகிேறாம், மேலும் கோயில் வளாகத்தில் போடப்பட்ட பந்தலையும் பிரித்து வருகிறோம்’’ என்றனர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க