வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (07/12/2018)

திருடிய வீட்டில் போலீஸுக்கு சவால்விட்டுச் சென்ற கொள்ளையர்கள்!

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள், போலீஸாருக்கு துப்புக் கிடைக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடிகளை தூவிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது. 

                                                           கொள்ளையர்கள் திருடிய வீடு

பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கந்தராஜா. இவரின் மனைவி மணிமேகலை. கடந்த 2-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு கணவன் மனைவி இருவரும் சென்னையில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரப் பெண் அதிர்ச்சியடைந்தார். சென்னை சென்றிருந்த மணிமேகலையிடம், ``உங்களின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிக்கிறது. நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் வந்து போன சத்தம் கேட்டது. உடனே வாங்கம்மா'' என்று சொல்லியிருக்கிறார். 

                                       வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

இதையடுத்து, அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. திருட்டைக் கண்டுபிடிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டுச் சென்றிருக்கிறார்கள். போலீஸாரின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து ரூ.30,000 பணம், நகை மற்றும் வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்பதாக மணிமேகலை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.