வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:17 (07/12/2018)

`தீர்ப்பை ஆளுநரே மதிக்கவில்லை!’ - ராஜ்பவன் வாசலில் தீவிரமடையும் போராட்டம் #BanwarilalPurohit

`7 பேர் விடுதலை’ என்னும் வாக்கியத்தைக் கிட்டத்தட்ட தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் உச்சரித்துவிட்டனர். ஆனால், இன்றுவரை ஆளுநரின் காதுகளுக்கு எட்டவில்லை. ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டிய தமிழக அரசும் மௌனம் சாதிக்கிறது. 

ஆளுநர்
 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும், இதுதொடர்பாக ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி  தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டத்தின் முடிவில் சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள், அமைச்சரவையின் தீர்மானம், சட்டவிதி 161-ன் படியிலான கருணை மனு உள்ளிட்டவை, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுநர் கருத்து கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

ஏழ்வர் விடுதலை
 

தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனிடையே தர்மபுரி பேருந்து எரிப்பில் சிறையிலிருந்த அ.தி.மு.க-வினர் மூன்று பேரை விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி வழங்கினார். இது தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட். வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் மேலும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

வைகோ

 7 பேரின் விடுதலையைத் தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே-17 இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆனால், ஆளுநர் எதற்கும் பிடிகொடுக்கவில்லை.

போராட்டம்
 

இன்று பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ராஜ்பவன் வாசலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். 7 பேர் விடுதலையாகி வெளியே வரும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைத் தொடர்புகொண்டு பேசினோம்..  `28 ஆண்டுக்காலம் கொடும் சிறையில் வாடி வருகின்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று தமிழகம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசும் தமிழக அமைச்சரவையும் எடுத்த முடிவை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு  ஆணவத்தோடு தமிழக ஆளுநர் நடந்துகொள்வது ஜனநாயகத்துக்கு மாண்பல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க ஆளுநர் தவறுகிறார். தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்குத் தலைவராக இருக்கிற ஆளுநரே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் சாதாரண கடைக்கோடி தமிழன் எப்படி சட்டத்தை மதிப்பான். மேலும் தள்ளாத வயதிலும், தளராமல் தமிழக அரசின் கதவுகளையும், நீதிமன்றத்தின் கதவுகளையும் அனைத்துப் படிக்கட்டுகளையும் ஏறி இறங்கி ஒரு மாபெரும் நீதிப்போராட்டம் நடத்திவரும் அற்புதம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா.

வேல்முருகன்
 

அதற்காகதான் போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறோம். எங்களது நோக்கம் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல. தமிழக காவல்துறைக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்பதும் அல்ல. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது,  `7 பேர் விடுதலைக்காக போனதடவை  100  பேருக்குத்தான் அனுமதியளித்தோம். ஆனால் போராட்டத்தில் 3,000 பேர் கூடிவிட்டனர். எனவே, இம்முறை அனுமதி அளிக்க முடியாது’ என்று கூறிவிட்டனர். அதோடு விடாமல் என்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  அதேபோன்று ஆளுநர் மாளிகை முன்பு வைகோ ஒருங்கிணைத்த போராட்டத்தின்போதும் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், தமிழக சட்டமன்றமும் எடுத்த ஒரு முடிவை தமிழக ஆளுநர் நடைமுறைப்படுத்த மறுக்கிறார். அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜனநாயக முறையில் போராட்டங்களை முறையாகக் காவல்துறையை அணுகி நாங்கள் அனுமதி கேட்கும்போது அனுமதி மறுப்பதும், அதன் பிறகு அனுமதி கொடுப்பதும், பின்னர் மக்களுக்கு இடைஞ்சல் செய்ததாகக் கூறி பொய்வழக்கு பதிவு செய்வதும் இவையெல்லாம் நியாயம் தானா என்று முதல்வர் யோசிக்க வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்றிய தீர்மானத்தின்படி அ.தி.மு.க ஆட்சி நடக்கவில்லை, அவர் எடுத்த கொள்கை முடிவின்படி அரசு செயல்படவில்லை. அ.தி.மு.க அரசு ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் வெறும் நாடகம். 

அற்புதம்மாள்

அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த மூவரை இதே பிரிவு 161-ஐ பயன்படுத்தி விடுதலை செய்யச் சொல்கின்ற அதிகாரம் அரசிடம் உள்ளதெனில் அதே அதிகாரத்தை ஏன் ஏழ்வர் விடுதலையில் தமிழக முதல்வர் பயன்படுத்தவில்லை. அரசு அனுப்பிய கோப்புகளைத் தூக்கி குப்பையில் போட்டிருக்கிற ஆளுநரை நேரடியாகச் சந்தித்து முதல்வர் வலியுறுத்தியிருக்க வேண்டாமா? ஏன் இந்த முயற்சிகளை எடுக்கவில்லை. சட்டதுறை அமைச்சரும், அரசு சட்ட ஆலோசகரும் இதைக் குறித்து வாய்திறக்க மறுப்பது ஏன். ஏழ்வரின் விடுதலைக்காக ஒரு உயிரைப் பலிகொடுத்துவிட்டோம்.

அற்புதம்மாள்
 

பேரறிவாளனின் தாய் தமிழகத்தில் உள்ள அத்தனை அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும், நீதிமன்ற படிக்கட்டுகளுக்கும், வழங்கறிஞர்கள் அலுவலர்களுக்கும், சி.பி.ஐ-யில் பணியாற்றிய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கும் நடையாக நடந்து விடுதலைக்காக மடிப்பிச்சை கேட்காத குறையாகக் கேட்கிறார். ஏன் இப்போதும் தமிழக முதல்வரின் மனம் இறங்கவில்லை. தீர்மானம் நிறைவேற்றியதற்கு நாங்கள் கைகூப்பி நன்றி சொல்கிறோம். அதே சமயத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவை ஆளுநர் தூக்கி குப்பையில் வீசியிருக்கிறார். அதை ஏன் அரசு கண்டிக்க மறுக்கிறது. தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவை உடனடியாக ஆளுநர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக மக்கள் 7 பேர் விடுதலைக்காக வீதிக்கு வந்து போராட வேண்டும். 7 பேரை விடுவிக்கும் வரை எங்கள் அறப்போராட்டங்கள் தொடரும். தினமும் ஆளுநர் மாளிகை முன்பு ஏழு பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்காகத் காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். எங்கள் போராட்டங்கள் மக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் 7 பேர் விடுதலையாகும் வரை தொடரும்” என்று முடித்தார் ஆதங்கத்துடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க