கல்விப் பிரச்னை - ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுத்த ஏ.பி.வி.பி அமைப்பினர்! | Abvb protest in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (07/12/2018)

கல்விப் பிரச்னை - ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுத்த ஏ.பி.வி.பி அமைப்பினர்!

தமிழகத்தில் உள்ள கல்வி பிரச்னைகள் தொடர்பாக, கோவையில் ஜெயலலிதாவின் சிலைக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர்.

ஏ.பி.வி.பி


அந்த மனுவில், ``நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் என்பது சான்றோரின் வாக்கு. ஆனால், இன்று தமிழக கல்வித் துறையில் உள்ள பிரச்னைகளால் மாணவர்களின் நிகழ்காலமே பாதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக கல்விதான் முதன்மை வியாபாரமாக உள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கி, துணைவேந்தர் நியமனம் வரை வெளிப்படையாக ஏலம் நடக்கிறது. நிர்ணயம் செய்யப்படாத கல்விக் கட்டணங்களால், ஒரே பாடத்துக்கு ஒவ்வொரு பல்கலைக்கழகமும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. கல்வியாண்டு தொடக்கத்தில் வழங்கப்படவேண்டிய உதவித்தொகை, ஆண்டின் இறுதியாகியும் வழங்கப்படவில்லை. பல இடங்களில் பஸ்பாஸ் நடைமுறையிலேயே இல்லை. பெண்களைப் போற்றி வணங்கிய தமிழகத்தில் மாணவிகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக, நிர்மலாதேவி போன்றவர்களின் செயல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்களின் தொடர் மரணங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆதி திராவிட பழங்குடி மாணவர்களின் விடுதிகள் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. இதில், மாணவர்களின் சில பிரச்னைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். மேற்கண்ட இந்தப் பிரச்னைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் பிரச்னைகளுக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர்.  இதைக்கண்ட அ.தி.மு.க-வினர், ஏ.பி.வி.பி அமைப்பினரைக் கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில், தாக்குதல் நடைபெறவே, சம்பவ இடத்துக்கு விரைந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்களைக் கைது செய்தனர்.