40,000 கி.மீ பயணம்... ரூ.7 லட்சம் செலவு! - சேலம் ராஜராஜனின் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு | Salem man travels across India to promote environmental awareness

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:20:20 (07/12/2018)

40,000 கி.மீ பயணம்... ரூ.7 லட்சம் செலவு! - சேலம் ராஜராஜனின் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு

இவ்வுலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அதை மீட்கும் முயற்சியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரி இந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றி வருகிறார் ராஜராஜன். ``என்னைப் பார்த்து ஒருவர் மாறினாலும் அது எனக்கான வெற்றிதானே. அதை நோக்கி எனது பயணம்" என நெகிழ்ந்தார். 

                                  

சேலத்தைச் சேர்ந்த ராஜராஜன் சைக்கிள் ஓட்டுவதில் வல்லவர். சைக்கிளில் இந்தியா முழுவதும் 40,000 கிலோ மீட்டர் சுற்றி கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி சேலத்தில் இருந்து தனது பயணத்தைச் சைக்கிளில் தொடங்கினார். பயணத்தின் வழியில் உள்ள பள்ளிகளில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் உடல் ரீதியான பயன்கள், இதனால் ஏற்படும் பெட்ரோல் சேமிப்பு, பெட்ரோல் சேமிப்பால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஏற்படுத்தி வருகின்றார். 

                                     

அரியலூர் மாவட்டத்துக்கு இன்று வருகை தந்து மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் சைக்கிளில் சென்று தனது பயணத்தின் குறிக்கோள் மற்றும் தனது பயணம் குறித்த விழிப்புஉணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து ராஜராஜனிடம் பேசுகையில். ``கின்னஸ் சாதனைக்காகத் தொடங்கிய பயணம் என்றாலும் போகுமிடமெல்லாம் இது பெட்ரோல் சேமிப்பு, அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புஉணர்வை மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன்.

                                          

2017 அக்டோபர் 2-ம் தேதி தொடங்கிய எனது பயணம் தற்போது வரை 20,000 கிலோமீட்டருக்கு மேல் கடந்துள்ளேன். திருச்சி - கோயம்புத்தூர் வழியாக ஊட்டிக்குச் சென்று ஊட்டியிலிருந்து காஷ்மீர் சென்றடைந்து அங்கிருந்து கர்நாடகம் வழியாக 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சேலத்தில் எனது பயணத்தை முடிக்க உள்ளேன். இதில் 40,000 கிலோ மீட்டர் எனது பயணம் இருக்கும். இது கின்னஸ் சாதனைக்காக நான் எடுத்துக்கொண்ட முயற்சி. இதற்கான செலவு 7 லட்சம் ரூபாய் வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனது சேமிப்பாக 4 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் மீதமுள்ள செலவுத் தொகையும் ஈடுகட்டி எனது பயணத்தை வெற்றிகரமாக முடிப்பேன். என்னைப் பார்த்து ஒருவர் மாறினாலும் அது எனக்கான வெற்றிதானே. அதை நோக்கிதான் பயணம் செய்துகொண்டிருக்கிறேன்" என்று முகமலர்ச்சியோடு முடித்தார்.