`அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும்!’ வலுக்கும் கோரிக்கை | DVAC officials conducts raid at salem omalur government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (07/12/2018)

கடைசி தொடர்பு:19:50 (07/12/2018)

`அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த வேண்டும்!’ வலுக்கும் கோரிக்கை

ரெய்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் திடீர் ரெய்டு மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்த மருத்துவமனையைப் பற்றி நன்கு தெரிந்த சமூக ஆர்வலர்களிடம் விசாரித்தபோது, ``சேலம் மாவட்டம் ஓமலூரின் மையப்பகுதியில் தாலுகா அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பெண்கள் வார்டு, ஆண்கள் வார்டு, குழந்தைகள் வார்டு, ஸ்பெஷல் வார்டு, மருந்தகம், சிகிச்சை அறை எனப் பல பிரிவுகள் இருக்கிறது. இங்கு 13 அரசு மருத்துவர்களும் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்களும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணம் வசூலிக்கிறார்கள் என்றும் மாநிலம் முழுவதும் எந்தெந்த மருத்துவமனையில் அதிகளவு நோயாளிகளிடம் லஞ்சம் வசூலிக்கிறார்கள் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆதாரமாகத் தகவல் அனுப்பி இருக்கிறார்கள். அதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி இருக்கிறார்கள்.

ஓமலூர் மருத்துவமனை

ஓமலூர் அரசு மருத்துவமனையில் மதியம் 12 மணிமுதல் ரெய்டு நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டைப்போல ஒவ்வொரு வருடமும்  ஒரே நேரத்தில் அனைத்து துறையின் அலுவலகங்களிலும் திடீர் ரெய்டு மேற்கொண்டால் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் லஞ்சம் வாங்குபவர்களுக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதோடு தண்டிக்கவும் செய்தால் காலப்போக்கில் லஞ்ச லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்'' என்றார்.

இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமெளலியிடம் கேட்டதற்கு, ``இது பொதுவாக நடத்தப்படுகின்ற ரெய்டு. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடுகள் ஏதாவது நடக்கிறதா என்பதை ஆய்வு செய்யவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. ரெய்டு நிறைவு பெற்ற பிறகே, ஏதாவது முறைகேடுகள் இருக்கிறதா என்று தெரியவரும்'' என்றார்.