வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (07/12/2018)

`நிகழ்ச்சிக்கு கூப்பிட முடியாது; பதவியைப் பறிக்கப்போறோம்!' - அமைச்சர் முன்பு நிர்வாகிக்கு குத்துவிட்ட எம்.எல்.ஏ

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அ.தி.மு.க-வினர் மோதலில் ஈடுபட்டனர்.

அதிமுக 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஆரணி நகராட்சி அலுவலகத்தில் 1 கோடியே 40 லட்சம் மதிப்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பை பிரிப்பதற்கான புதிய கட்டடம் திறப்புவிழா நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் செய்யாறு எம்.எல்.ஏ.வும், திருவண்ணாமலை. அ.தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளருமான தூசி.மோகன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆரணி

அரசு விழா ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு, அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் நித்தியானந்தம் என்பவர், எம்.எல்.ஏ தூசி.மோகனிடம் சென்று `கட்சி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைப்பது இல்லை, கட்சியில் நான் முக்கிய பொறுப்பில் உள்ளேன் வடக்கு மாவட்டத்தில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் எனக்கு ஏன் தெரியப்படுத்துவது இல்லை. கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்குக்கூட என்னை அழைப்பதில்லை, கட்சிக் கூட்டம் மேடைகளில் என் பெயரையும் சொல்வதில்லை, அதோடு அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்கிறார் என்பதைச் சுத்தமாக தெரியப்படுத்துவது இல்லை என்ன காரணத்தினால் இப்படிச் செய்கிறீர்கள்' என்று கேட்டார்.

நகராட்சி

அதற்கு சிறிது நேரம் அமைதியாக இருந்த எம்.எல்.ஏ மோகன்,  நித்தியானந்தத்திடம் `` உன்னை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க முடியாது. உன்னிடம் இருந்து எப்படி பதவியைப் பறிப்பது என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று கோபமாக நித்தியானந்தத்தின் சட்டையைப் பிடித்து மார்பில் ஒரு குத்துவிட்டார். இதில், நிலைகுலைந்த நித்தியானந்தம் என்ன செய்வது என்று தெரியாமல் பதிலுக்கு எம்.எல்.ஏ தூசி, மோகனைத் தாக்க ஆரம்பித்தார். உடனே அங்கு கூடியிருந்த எம்.எல்.ஏ-வின் ஆட்களும், அமைச்சரின் ஆட்களும் சேர்ந்து நித்தியானந்தத்தைக் கடுமையாகத் தாக்கினர். உடனே அங்கு கூடியிருந்த கட்சி  நிர்வாகிகள் சிலர், பிரச்னையைத் தடுத்து நிறுத்தி நித்தியானந்தத்தை காரில் அனுப்பிவைத்தனர். இந்தப் பிரச்னை எதிலும் தலையிடாமலும் யார் பக்கம் பேசுவது என்று தெரியாமலும் மவுனமாகவே இருந்தார் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். இந்த சண்டை ஓய்ந்த பிறகே 1 மணி நேரம் தாமதமாக நிகழ்ச்சி தொடங்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க