ஹவாலா பணம் ரூ.64 லட்சம் பறிமுதல்! - தொண்டி சுங்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை | Thondi customs officials catches rs 64 lakhs of hawala money

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (07/12/2018)

ஹவாலா பணம் ரூ.64 லட்சம் பறிமுதல்! - தொண்டி சுங்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருவாடானை அருகே தொண்டியில் ரூ.62 லட்சம் ஹவாலா பணத்தைத் தொண்டி சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக பணம் கொண்டு வந்தவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சுங்கத்துறையினர் கைப்பற்றிய ஹவாலா பணம்

ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியான தொண்டி பகுதியில் இருந்து தங்க கட்டிகள் கடத்தப்படுவதும், அவ்வப்போது ஹவாலா பணம் கடத்தலும் நடந்து வருகிறது. இந்நிலையில், திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டிணம் பேருந்து நிலையம் அருகே கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கதுறை உதவி இயக்குநர் ராஜ்குமார் மோசஸ் உத்தரவின் பேரில் தொண்டி சுங்கத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் தர்மீந்தர் ஷா உள்ளிட்ட சுங்கத்துறையினர் அதிகாலை 4 மணி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்துல் ரவூப்

அந்த வழியாக வந்த பல்வேறு வாகனங்களை சோதனையிட்டபோது சென்னையிலிருந்து தொண்டிக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தை மடக்கி சோதனையிட்டனர். அதில்  62,25,200 ரூபாய் பணத்துடன் பயணம் செய்த தொண்டி மரக்காயர் தெருவைச் சேர்ந்த ஹபீப்முகம்மது மகன் அப்துல் ரவூப் (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

இந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் எனவும், இப்பகுதியில் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருபவர்கள், தங்கள் குடும்பத்துக்கு அனுப்பி வைத்த பணமாக இருக்கக்கூடும் எனத் தெரியவருகிறது. இது குறித்து சுங்கத்துறையினர் கூறுகையில், கைப்பற்றப்பட்ட பணத்தை மதுரை வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.