வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (07/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (07/12/2018)

`கற்பனையான மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருக்கின்றன!’ - உத்தரகாண்டில் கேதர்நாத் படத்துக்குத் தடை

சுஷாந்த் மற்றும் சாரா அலி கான் நடித்து இன்று வெளியான `கேதர்நாத்' எனும் இந்தி திரைப்படத்தை உத்தரகாண்ட் மாநிலத்தில் திரையிடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதில் புனித யாத்திரைக்கு வரும் பயணிகளின் சுமை தூக்கும் கதாபாத்திரமாக நடித்துள்ள சுஷாந்த் `மன்சூர்' எனும் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர். அங்கு ஒரு பயணியாக வரும் இந்துப் பெண்ணாக `மண்டக்கண்ணி' கதாபாத்திரத்தில் சாரா அலிகான் நடித்துள்ளார். 

கேதர்நாத்

கடந்த டிசம்பர் 5-ம் தேதி இப்படத்தைப் பற்றி வரும் புகார்களை முறையிடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சரின் கீழ் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையை ஏற்று உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், 'கேதர்நாத்' மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக உள்ளது' என்று கூறி படத்தைத் தடை செய்துள்ளார். ஏற்கெனவே, 'கேதர்நாத்' எனும் படத்தின் பெயரை கேள்விப்பட்டதும் பல்வேறு பிரச்னைகளை படக்குழு சந்தித்து இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பை நிறுத்தியது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அபிஷேக் கபூர் பேசுகையில், ``இப்படம் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல. படத்தில் அன்பு பரிமாறிக்கொள்வதைத்தான் காட்டியிருக்கிறோம். கேதர்நாத்தின் தூய்மையைக் கெடுக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை" என்று கூறியிருந்தார். 

கேதர்நாத்

இதுகுறித்து உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ் கூறியதாவது, ``கேதர்நாத் புனிதத் தலத்தின் மீது பல்வேறு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிராக யாரும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். படத்துக்கு 'கேதர்நாத்' என்ற பெயரைத் தவிர வேறு பெயர் வைத்திருக்கலாம். 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் காட்டப்பட்டுள்ள சில காட்சிகள் கற்பனையாகவும், மிகைப்படுத்தப்படும் இருக்கின்றன" என்று கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் 40-க்கும் குறைவான தியேட்டர்களே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.