ஆண் குழந்தைக்கு ஆயிரம், பெண் குழந்தைக்கு ரூ.500 - ரெய்டுக்கு வித்திட்ட அரசு மருத்துவமனை ஊழியர்களின் வசூல் | Vigilance department conducts raid at Cuddalore G.H

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:21:20 (07/12/2018)

ஆண் குழந்தைக்கு ஆயிரம், பெண் குழந்தைக்கு ரூ.500 - ரெய்டுக்கு வித்திட்ட அரசு மருத்துவமனை ஊழியர்களின் வசூல்

கடலூர் அரசு மருத்துவமனையில் தினம் அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களிடம் ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் ஆயிரமும், பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500-ம்  ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளது. இந்த நிலையில், இன்று மதியம் கடலூர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜாமெல்வின்சிங் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் அரசு மருத்துவமனை

அப்பொழுது மருத்துவமனை நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டது. மருத்துவமனைக்குள் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என யாரையும் அனுமதிக்கவில்லை. பிரசவ வார்டு உட்பட மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள்.

இதில் செவிலியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு, ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் பிரிவு போன்ற பிரிவுகளிலும் இருந்த கட்டுக்கட்டான பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றிய பணத்தில் கணக்கில் வராத பணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடலூர் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

கைப்பற்றப்பட்டுள்ள பணத்தில் எக்ஸ்ரே, ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்றவற்றுக்கு அரசு நிர்ணயித்த கட்டணமும் உள்ளது. இதனால் இந்த தொகை போக கணக்கில் வராத பணம் குறித்து ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட இந்த சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.