வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (07/12/2018)

`வாரநாள்களில் கட்டணம் குறைப்பு!’ - போட்டியைச் சமாளிக்க எஸ்.இ.டி.சி நிர்வாகம் முடிவு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் வார நாள்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 

எஸ்.இ.டி.சி பேருந்துகள்

தமிழகத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளுடன் போட்டிப்போடும் விதமாகக் 134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட 515 பேருந்துகளைத் தமிழக அரசு வாங்கியது. இந்தப் பேருந்துகள் அனைத்தும் கடந்த மாதம் ஜுலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சென்சார் தானியங்கி கதவுகள், தானியங்கி படிக்கட்டுகள், தாழ்தளப் படிக்கட்டுகள், பேருந்துக்கு முன்னேயும் பின்னேயும் வரும் வாகனங்களைத் துல்லியத் தன்மையுடன் அறிந்துகொள்ள சென்சார் கருவிகள், ஜி.பி.எஸ் கருவி, சிசிடிவி கேமரா எனப் பல்வேறு அம்சங்களுடன் இந்தப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 515 பேருந்துகளில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 40 பேருந்துகள் ஒதுக்கப்பட்டன. ஏசி படுக்கை வசதி பேருந்துகள், ஏசி இல்லாத 2 படுக்கை வசதி பஸ்கள், அல்ட்ரா கிளாசிக் பஸ்கள், ஏசி படுக்கை மற்றும் இருக்கை வசதி பேருந்துகள் எனத் தனியாருக்குப் போட்டியாகக் களமிறங்கியது அரசு போக்குவரத்துக் கழகம். முதன்முறையாகப் படுக்கை வசதிகள் கொண்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் எர்ணாகுளம் ஆகிய பகுதிகளுக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களைத் தவிர பிற நாள்களில் அரசு விரைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கப்படும் பேருந்துகளில் பெரியளவில் கூட்டங்கள் இல்லை. ஏராளமான வசதிகள் இருந்தும் பேருந்துக் கட்டணம் காரணமாக மக்கள் இந்தப் பேருந்துகளைப் புறக்கணித்தனர்.

எஸ்.இ.டி.சி பேருந்துகள்

தமிழகத்தில் இயங்கும் தனியார் ஆம்னி பேருந்துகளைக் காட்டிலும் அரசு விரைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் இயங்கப்பட்ட இந்தப் பேருந்துகள் வாரநாள்களில் காலியாகவே தனது பயணம் மேற்கொண்டது. பேருந்துகளில் கூட்டம் இல்லாததால் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்படும் பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது. நடத்துநர்கள் கூவிக் கூவி பயணிகளைப் பிடிக்கும் நிலைதான் இருந்தது.

இந்நிலையில்தான் தற்போது ஏசி படுக்கை வசதி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி வாரநாள்களில் திங்கள் முதல் வியாழன் வரை இயக்கப்படும் பேருந்துகளில் பேருந்துக் கட்டணத்தைக் குறைத்துள்ளனர். தற்போது படுக்கை வசதிகள் கொண்ட ஏசி பேருந்துகளில் கிலோமீட்டருக்கு ரூபாய் 2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதை 1.80 காசுகளாகக் குறைத்துள்ளனர். அதேபோல் ஏசி இல்லாத படுக்கை அறை வசதிகள் கொண்ட பேருந்தில் கிலோமீட்டருக்கு ரூ.1.55 காசுகள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதை 1.45 காசுகளாக நிர்ணயித்துள்ளனர். அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் ரூ.1.15 காசுகளாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.1.05 காசுகளாக வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தற்போது வசூலிக்கப்படும் பேருந்து கட்டணத்தில் 10% கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.