வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (07/12/2018)

கஜாபுயல் பாதிப்பைத் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தவறிவிட்டது - டி.ராஜா

கஜா  புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்தப் பிரச்னையை வரும் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் எழுப்ப உள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறினார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட, ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கீரமங்கலத்தில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
 முன்னதாக புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, `‘கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கடுமையான பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர். ஏராளமான தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கத் தவறிவிட்டது. இந்தப் பிரச்னையை வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப உள்ளோம். கஜா புயல்  நிவாரணமாகத் தமிழக அரசு கேட்டுள்ள 15,000 கோடி ரூபாயைக் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக அரசு மாநில உரிமைகள் மற்றும் நலன்களை இழந்துள்ளது. மேக்கே தாட்டூ பிரச்னையில் சட்டப்பேரவையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்றி உள்ள சூழலில், இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையைக் காக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது முக்கியமல்ல. பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மாநிலக் கட்சிகளின் தற்போதைய எண்ணமாக உள்ளது. தற்போது,  ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட இரு மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு எதிராக அமையும் எனக் கள நிலவரங்கள் கூறுகிறது. இந்த முடிவுகளைப் பொறுத்தே வரும்  நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் அமையும்’ என்றார்.