வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (08/12/2018)

திருக்கழுக்குன்றம் அருகே குரங்குகளால் மக்கள் அவதி - பொறி வைத்து பிடித்த வனத்துறையினர்!

குரங்கு செய்யும் சேட்டைகள் பார்ப்பதற்கு குதூகலமாக இருக்கும். அதே சேட்டை எல்லை மீறும்போது தொந்தரவாக அமைந்துவிடும். பல ஆண்டுகளாகக் குரங்கு தொல்லையால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்று வனத்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் நிம்மதி அடைந்துள்ளது.

குரங்குகளை பிடிக்கும் வனத்துறையினர்

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ளது சோகண்டி கிராமம். இப்பகுதியைச் சுற்றிக் காப்புக்காடுகளும் மலைகளும் நிறைந்திருக்கின்றன. அங்கிருக்கும் காடுகளில் இருக்கும் குரங்குகள் குடிப்பதற்கு நீரில்லாமலும், உணவு இல்லாமலும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு படிப்படியாக வரத்தொடங்கின. காலப்போக்கில் அவை கிராமப் பகுதிகளிலேயே தங்க ஆரம்பித்துவிட்டன. வீடு மற்றும் தோட்டங்களில் உள்ள கொய்யா, மாமரம், தென்னை உள்ளிட்ட மரங்களில் உள்ள காய்கனிகளை பறித்துப் போட்டு துவம்சம் செய்துவிடும். காய்கறி செடிகளையும் உடைத்துப் போட்டுவிடும். வாயில்கள், ஜன்னல்கள் வழியாக வீடுகளில் நுழைந்து மளிகை சாமான்கள், காய்கறிகளை எடுத்துச் சென்றுவிடும். சிலநேரங்களில் முக்கியமான பொருட்களையும் குரங்குகள் தூக்கிக் கொண்டு மரத்தின் மீது ஏறிவிடும். இதனால் குரங்கை பின்தொடர்ந்து சென்று அந்த பொருளை மீட்டு வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். குழந்தைகள், பெண்களை மிரட்டி அவர்களின் கையில் உள்ள உணவுப் பொருட்களை பிடுங்கிவிடும். விரட்டச் சென்றால் கடிக்க வந்துவிடும். குரங்குகளில் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து குரங்குகளை விரட்ட முயன்றனர். தினந்தினம் தீபாவளியானதே தவிர குரங்கு மிரண்ட பாடில்லை. இதனால் கிண்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

குரங்குகளை பிடிக்கும் வனத்துறையினர்

அந்தப் புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் கொண்ட வனத்துறையினர் இன்று காலை சோகண்டி கிராமத்திற்கு வந்தனர். கூண்டுகள் அமைத்து வாழைப்பழம், பொரி, முட்டை ஆகியவற்றை வைத்தனர். வனத்துறையினருக்கு உதவியாகவும் வேடிக்கை பார்ப்பதற்காகவும் என அந்த கிராம மக்கள்  காலையிலிருந்தே ஒன்று கூடிவிட்டார்கள். இதைக் கண்டதும் குரங்குகள் ஓடிவந்து கூண்டிற்குள் நுழைந்தன. கூண்டில் நுழைந்த குரங்குகளை ஒவ்வொன்றாக அடுத்த அறைக்கு மாற்றிவிட்டுக் கொண்டே இருந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த குரங்குகளுக்கு வலைவிரித்தனர். சில குரங்குகள் மரத்தில் இருந்து எளிதில் வரவில்லை. அந்த குரங்குகளுக்கு வனத்துறையினர் முதலில் வாழைப்பழத்தைக் காட்டுகிறார்கள். குரங்கு இறங்கி வந்ததும் கூண்டு அருகே வாழைப்பழத்தை வைக்கின்றனர். அதைத் தின்றதும் இன்னொரு பழம் கொடுப்பார்களா எனக் குரங்கு ஏக்கமடைந்துவிடுகிறது. அடுத்து கூண்டு அருகில் முட்டை என அதற்குப் பிடித்த உணவுகளைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கூண்டிற்குள் வரவழைக்கிறார்கள். நாக்கில் எச்சில் ஊறிய நிலையில் கூண்டுக்குள் வரும் குரங்குகளை லபக் எனத் தொலைவில் இருந்தே கயிறு மூலமாக அடைத்துவிடுகிறார்கள்.  மாலை 5 மணிவரை சுமார் 120 குரங்குகள் பிடிபட்டிருக்கின்றன. அவை ஆந்திர வனப்பகுதிகளில் கொண்டு செல்லப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இனியாவது கிராம மக்கள் நிம்மதியாக உறங்குவார்களா, அல்லது ‘மங்க்கி 2.0’ வெர்ஷனை காண நேரிடுமா என்பது அடுத்த சில தினங்களில் தெரிந்துவிடும்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க