`கலெக்டர் என்பதைவிட முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதே பெருமை’ - கரூர் கலெக்டர் உருக்கம்! | I am proud of being a former soldier's son Karur collector's speech!

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (08/12/2018)

`கலெக்டர் என்பதைவிட முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதே பெருமை’ - கரூர் கலெக்டர் உருக்கம்!

"கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்பதைவிட முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதையே நான் பெருமையாக கருதுகின்றேன். எனது மகனையும் ராணுவக் கல்லூரியில் சேர்த்து படிக்க திட்டமிட்டுள்ளேன்" என்று கொடிநாள் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் உருக்கமாக பேசினார்.

 முன்னாள் ராணுவ வீரர்களோடு தேநீர் விருந்து...

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் கொடிநாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்தக்கொடி நாளில் நமது தாய்நாட்டிற்காக போராடிய ராணுவ வீரர்கள் மற்றம் அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் நிதி வசூல் செய்யப்பட்டு வருகின்றது. மேலும், அன்றைய தினம் முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் முன்னாள் படைவீரர்களுடன் அமர்ந்து தேநீர் விருந்து கொடுத்து உபசரித்து,நலத்திட்ட உதவிகள் வழங்கி,அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிவார். அதனடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான,நிதி சேகரிப்பு நிகழ்ச்சி, தேநீர் விருந்து மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்த 9 நபர்களுக்கு கல்வி நிதியுதவி, திருமண நிதியுதவி, வங்கி கடன் வட்டி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்றவைகளாக ரூ.1,16,508 மதிப்பிற்கான காசோலைகளை வழங்கினார் ஆட்சித்தலைவர் அன்பழகன்.


 முன்னாள் ராணுவ வீரர் குடுபங்களுக்கு நிதி உதவி வழங்கும் கலெக்டர்

அப்போது பேசிய கலெக்டர் அன்பழகன்,  "நமது தாய்த்திருநாட்டின் பாதுகாப்பு பணிக்காக பகல் இரவு பாராது, சுக-துக்கம் பாராது, ஓய்வறியாது அரும் பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள், போரில் வீரமரணம் அடைந்த படைவீரர்கள், காயமடைந்த படைவீரர்கள் ஆகியோரின் தன்னலமற்ற சேவையினை போற்றும் வகையில் நாடு முழுவதும் இன்று படைவீரர் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து தரப்பு மக்களும் தாராளமாக நிதியளிக்க முன்வர வேண்டும். நான் மாவட்ட ஆட்சித்தலைவர் என்பதைவிட முன்னாள் ராணுவ வீரரின் மகன் என்பதையே பெருமையாக கருதுகிறேன். எனது தந்தையும் நமது தாய்நாட்டிற்காக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்தான். முற்காலத்தில் படையெடுப்பு காரணமாகவே தமிழ் மொழி பரவி வந்தது. 1000 தொழில்கள் செய்யலாம். ஆனால், ராணுவத்தில் பணிபுரிவது வேறு. அதன் மூலம் ஒழுக்கம் உருவாகிறது. அது கடைசிவரை நம்முடன் வருகிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்திலுள்ளவர்கள்தாம் அதிகமாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் தலைமையில் நாட்டின் விடுதலைக்காக செயல்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் அதிக அளவில் கலந்து கொண்டவர்கள் தமிழர்களாகும்.


 முன்னாள் ராணுவ வீரர் குடுபங்களுக்கு நிதி உதவி வழங்கும் கலெக்டர்..

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 10-ம் வகுப்பு முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் ராணுவ பயிற்சி முடித்த பின்னரே மேல்படிப்பு படிக்க முடியும். அதன் காரணமாக அவர்கள் ஒழுக்கமுள்ளவர்களாக மாறி கடைசி வரை அதை கடைபிடிக்கிறார்கள். முன்னாள் ராணுவத்தினர்கள் அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு சிவில் சர்வீஸ் தேர்வுகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் வேலைவாய்ப்புக்காக துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் கரூர் மாவட்டத்தில் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவத்தினர் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். முடிந்தால் அவர்களை ராணுவத்திலும் சேர்க்க வேண்டும். எனது மகனையும் ராணுவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.  முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும் மற்றும் கரூர் ஜவஹர் கடைவீதி பகுதியிலும் கொடிநாள் நிதி சேகரிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.