வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:12:51 (08/12/2018)

``பாப்புலர் முதலியார் வாய்க்கால் தூர்வாரும் பணி தொடக்கம்” - மகிழ்ச்சியில் ஊர்மக்கள்!

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடை பகுதியில் உள்ள பாப்புலர் முதலியார்வாய்க்கால் வாய்க்கால் ரூ.50 லட்சம் மதிப்பில் விஸ்தரிக்கும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாக பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

 விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியம், ஒத்தக்கடை பகுதியில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் ரூ.50 லட்சம் மதிப்பில் விஸ்தரிக்கும் பணியினையும், வாங்கலில் ரூ.1.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான பணிகளையும் பூமி பூஜையிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் தொடங்கி வைத்தார்.


 பூமி பூஜை போடும் அமைச்சர்

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, "நெரூர் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிக்கப்பட்டு, தூர் வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த விஸ்தரிப்பு வாய்க்கால் 6 கி.மீட்டர் நீளமுடையது. கருப்பம்பாளையம் ரொட்டிக்கடை முதல் வேடிச்சிபாளையம் வரை 3 கி.மீ நீளம் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஏற்கெனவே தூர் வாரப்பட்டு அப்பகுதி காளிபாளையத்திலுள்ள குளத்தில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள பெரிய காளிபாளையம் முதல் வேடிச்சி பாளையம் வரை 3 கி.மீட்டர் நீளத்தை ரூ.50 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகள் இன்று துவக்கிவைக்கப்பட்டது. இப்பணிகளை முடித்து சின்னகாளிபாளையம் பகுதியிலுள்ள 3 குளங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதன்மூலம் இடையே உள்ள 5,000 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. மேலும், இப்பகுதியிலுள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவூட்டப்படுவதுடன் நீரின் உவர்ப்புத்தன்மை நீங்கி நன்னீராகும் வாய்ப்பு அதிகமுள்ளது. இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் நன்மை பயக்கும் வகையில் இந்தப்பணி அமையும்.


பூமி பூஜை போடும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மேலும், வாங்கலில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை ரூ.1.20 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கான பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது" என்றார். மொத்தம் 6 கிலோமீட்டர் நீளமுள்ள பாப்புலர் முதலியார் வாய்க்காலில் 3 கி.மீட்டர் தூரம் ரூ.3.50 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 கீ.மீட்டர் நீளமுள்ள வாய்க்கால் ரூ.50 ட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. ஆகமொத்தம், பாப்புலர் முதலியார் வாய்க்காலை சீரமைக்க ஆகும் ரூ.53.50 லட்சம் தொகை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த நிதியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தங்களது நீண்டநாள் கோரிக்கை நிறைவேறிவிட்டதாக பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.