வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:03:00 (08/12/2018)

'ஜி.ஹெச்சில் நடத்தப்பட்ட ரெய்டு பணத்துக்காக அல்ல!' - அதிர வைக்கும் தகவல்

ரெய்டு

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருசில மருத்துவமனைகளில் கணக்கில் காட்டப்படாத பல ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் சிக்க, பல இடங்களில் ஒன்றும் கிடைக்காமல் வெறும் கையோடு தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திரும்பியிருக்கின்றனர். வெறுங்கையோடு திரும்பியது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் துளியும் வருத்தப்படவில்லை. பணத்திற்காக ரெய்டிற்குச் சென்றிருந்தால் தானே அவர்கள் வருத்தப்பட்டிருக்க வேண்டும். நடந்த ரெய்டில் பணத்திற்காக அல்ல என்ற பகீர் தகவல் கிடைத்திருக்கிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தலைமை அரசு மருத்துவமனைகளில் ரெய்டு நடக்க, ஈரோடு மாவட்டத்தில் எவ்வளவோ அரசு மருத்துவமனைகள் இருந்தும், கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் மட்டும் தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டில் இறங்கினர். காலை சுமார் 11 மணியளவில் ஆரம்பித்த ரெய்டு இரவு 7 மணி வரை நீடித்திருக்கிறது. ரெய்டின் முடிவில் 'கணக்கில் காட்டப்படாத வெறும் 1000 ரூபாய் மட்டும் தான் கிடைத்தது' என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

ரெய்டு

அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற சிகிச்சைகளுக்கு எக்கச்சக்கமாக மருத்துவர்கள் பணத்தைக் கறப்பதாக புகார் வந்ததாகவும், அந்தத் தகவலையொட்டி தான் ரெய்டு நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ரெய்டின் போது அதைத்தவிர வேறொன்றைத் தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் துருவித் துருவி கேட்டிருக்கின்றனர். அது மருத்துவமனையில் ஸ்டாக்கில் இருக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தானாம். 'மருந்துகள் ஏதேனும் முறையின்றி வெளியே போகிறதா?' என்றே துருவித் துருவி மருத்துவர்களை விசாரித்திருக்கின்றனர். மேலும், மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்குச் சென்று ஒவ்வொரு மருந்தையும் ஸ்டாக் லிஸ்டில் இருப்பதை வைத்து கிராஸ் செக் செய்திருக்கின்றனர். இந்தக் கோணத்தில் ரெய்டு நடக்கும் என்றறியாத மருத்துவர்கள் நடுங்கிப் போயிருக்கின்றனர். ரெய்டின் முடிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதிர்பார்த்ததை விட பல பகீர் தகவல்கள் கிடைத்திருக்கின்றனவாம்.

ஏற்கெனவே, கோவை பகுதியில் உள்ள ஒருசில மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட போதை மருந்து, மருத்துவமனையில் இருந்து திருடப்படுவதாக புகார் எழுந்தது. அதனையடுத்து, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மருந்துகளுடைய இருப்பு என்ன என்கின்ற கோணத்தில் ரெய்டினை முடுக்கியிருப்பது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் இந்த ரெய்டு சம்பந்தமாக பல பகீர் தகவல்கள் வெளியாக வாய்ப்பிருக்கிறது.