`யமுனை நதிக்கரையில் நாங்கள் அசுத்தம் செய்யவில்லை’ - வாழும் கலை அமைப்பு! | sri sri ravi shankar arrange devotional programme in thanjavur big temple

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:05 (08/12/2018)

`யமுனை நதிக்கரையில் நாங்கள் அசுத்தம் செய்யவில்லை’ - வாழும் கலை அமைப்பு!

இந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவர் நிகழ்ச்சி நடத்துவதற்குத் தடை விதித்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தஞ்சாவூரில் தெரிவித்தார்.

வாழும் கலை அமைப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலைமையில் விஞ்ஞான பைரவம் என்ற பெயரில் தியானம் மற்றும் யோகா நிகழ்ச்சிகள் நடத்த இருந்தது. இதற்காகக் கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டது. மேலும், இதில் கலந்து கொள்பவர்களிடம் ரூபாய் 3,000 வரை நன்கொடையாகப் பணம் வசூல் செய்யப்பட்டது. புராதன சின்னமான பெரிய கோயிலில் தனியார் அமைப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கும், அதற்காகப் பணம் வசூல் செய்யப்பட்டதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதனால் கோயில் மற்றும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் உடனே இந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் இன்று காலை போராட்டம் நடைபெற்றது. மதுரை உயர் நீதிமன்றத்தில் வெங்கட் என்பவர் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நிகழ்ச்சி நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் வாழும் கலை அமைப்பைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டபடி நிகழ்ச்சி இன்று மாலை நடக்கும் எனக் கூறியவர்கள் அவசர அவசரமாகத் தனியார் திருமண மண்டபத்தைப் பிடித்து ஏற்பாடு செய்தனர்.

கலை அமைப்பு

மண்டபம் இருந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 6.30 மணியளவில் வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆன்மிக உரையாற்றி, தியான நிகழ்ச்சியை நடத்தினார் ரவிசங்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ``நாங்கள் ஆன்மிக நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் நடத்தி வருகிறோம் நமக்குச் சொந்தமான நம்ம ஊரில் தடை விதித்திருப்பது வருத்தமளிக்கிறது. கோயிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துவதற்குத் தடை விதித்திருப்பதும் வருத்தமளிக்கிறது. அனைத்துவிதமான அனுமதியும் பெற்றே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். மக்கள் விரும்பியதனாலேயே பெரிய கோயிலில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தோம். இந்து கோயிலில் இந்து மதத்தைச் சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்தத் தடை விதித்திருப்பதும் ஆச்சர்யமாக உள்ளது. யமுனை நதிக்கரையில் எந்த ஓர் அசுத்தமும் நாங்கள் செய்யவில்லை சுத்தம்தான் செய்தோம்” எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க