வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:07:09 (08/12/2018)

”நியூட்ரினோவின் இரண்டாம் கட்ட ஆய்வு மோசமானதாக இருக்கும்” - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்!

நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட "சுற்றுச்சூழல் அனுமதி" தவறு என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யமுடியாது என்று தெரிவித்த அதே வேளையில் "தேசிய வனவிலங்கு வாரியத்திடம்" அனுமதி வாங்கும்வரை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தது தீர்ப்பாயம்.

இந்த கட்டுரையின் நோக்கம் வழங்கப்பட்டது  இடைக்கால தடையா அல்லது அறிவுறுத்தலா என்று ஆராய்வதற்காக அல்ல, இந்த கட்டுரையின் நோக்கம், தீர்ப்பிற்கு பிறகு திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்ததுதான். தீர்ப்பிற்குப் பின்னர் நியூட்ரினோ திட்டத்திற்கான ஒரு வீடியோ யூட்யூபில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் இந்தத்திட்டத்தின் நன்மைகள் என நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானிகளால் கருத்துக்களின் மீது எடுத்து முன்வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச -2) மதுரை வடபழஞ்சியில் உள்ள நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்திற்கு வந்த நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் த.வி.வெங்கடேஸ்வரனும் நியூட்ரினோ திட்டத்தால் உள்ள நன்மைகள் பற்றி பேசி இருந்தார். உண்மையிலேயே இவர்கள் சொல்வதில் இருக்கும் கருத்துக்களின்மீது  இருக்கும் முரண்பாடுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள பூவுலகின் நண்பர்கள் பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். 

நியூட்ரினோ

விஞ்ஞானிகள் சொல்ல வரும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது நன்மைகள் இருக்கத்தானே செய்கின்றன. நியூட்ரினோவால் அப்படி என்ன கெடுதல்கள் இருக்க முடியும்?

``அந்த வீடியோ பேட்டியில் முக்கியமான நான்கு விஞ்ஞானிகளின் பேட்டிகள் உள்ளன. பொதுவாக நால்வரும் தெரிவிப்பது, இங்கே அமையவிருக்கின்ற ஆய்வுக்கூடம் மிகவும் முக்கியமானது என்றும், நியூட்ரினோ ஆய்வுகளுக்கு மேலும் வலு சேர்க்குமென்றும், இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என்றும், பொருளாதாரம் வளரும் என்று தெரிவிக்கிறார்கள். இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோக்களை ஆய்வு செய்வது எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தெளிவாக சொல்கிறார்கள். இந்த விஞ்ஞானிகள் சொல்லத்தவறியது, இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் மற்றும் அதன் பயன்பாடு பற்றியும்.”

நியூட்ரினோவின் இரண்டாவது கட்டம் என்ன?

”போராடும் மக்கள் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இயற்கையில் வரக்கூடிய நியூட்ரினோக்கள் குறித்த ஆய்வுகளை மக்கள் அதிகம் வாழாத ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்களில் மேற்கொள்ளவத்தை பற்றி எந்த பிரச்சனை இல்லை. ஆனால் அந்த வீடியோவில் கேள்விகளை கேட்கும்போது, தொழிற்சாலைகள் அல்லது ஆய்வுகூடங்களிலிருந்து  உற்பத்தி செய்யப்பட்டு வரும் நியூட்ரினோ குறித்த எந்த கேள்வியையும் எழுப்பவில்லை. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நியூட்ரினோ ஆய்வகம், அதன் இரண்டாவது கட்டத்தில் உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நியூட்ரினோ கற்றைகள் பொட்டிபுரம் நோக்கி அனுப்பப்படும். அதன் தாக்கமும் பயன்பாடும் என்ன என்பதுதான் எங்களுடைய முக்கியமான கேள்வி.”

நியுட்ரினோ கற்றைகளுக்கும், கதிர்வீச்சுக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் கதிர்வீச்சு இருக்கும் என்கிறீர்கள். இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

”நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கக்கூடிய பெர்மி ஆய்வகத்தின் இணையதளம் வெளிப்படையாக  சொல்லியிருக்கிறது. அதிக ஆற்றல் கொண்ட நியூட்ரினோ கற்றைகள் தயாரிக்கும் பணியில் கதிர்வீச்சு இருக்கும் என்றும், அக்கதிர்வீச்சு அருகிலுள்ள பகுதிகளிலும், நிலத்தடி நீரிலும் எந்த அளவில் இருக்கிறது (குறிப்பாக ட்ரிடியம்) என்பதையும் அளந்து வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். நியூட்ரினோ கற்றைகளை தயாரிக்கும் பணியில் வெளிப்படும் கதிர்வீச்சு அந்த குறிப்பிட்ட பகுதிக்குள்ளே அடங்கிவிடும் என்றும் அதை கண்காணிப்பதற்கே பல கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளதாகவும் சொல்கிறது அந்த இணையதள தகவல். ஆனால், இங்கே நியூட்ரினோ திட்டத்தின் விஞ்ஞானிகள், நியூட்ரினோவிற்கும் கதிர்வீச்சிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று சூடம் அடித்து சத்தியம் செய்கிறார்கள். காணொளியில் உள்ள ஒரு விஞ்ஞானிகளிடமும் உற்பத்தி செய்யப்பட நியூட்ரினோ குறித்த எந்த கேள்வியும் கிடையாது, ஆனால் இரண்டாவது கட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்களை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என நியூட்ரினோ திட்டம் குறித்தான திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. இதன் நோக்கங்கள், தாக்கங்கள்  குறித்து நிறைய பேசிவிட்டோம். காணொளியிலுள்ள மற்ற விஷயங்களை உற்று நோக்கினால் வரக்கூடிய தெளிவும் போராடும் மக்களுக்கு சாதகமாகவே உள்ளது.”

நியூட்ரினோ


அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஞ்ஞானிகள் உலகிலுள்ள நியூட்ரினோ ஆய்வக மைய இயக்குநர்கள்தானே... அதிலும் அனைவரும் நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள்.. அவர்கள் சொல்வது தவறாகுமா?

”டாக்கி கஜிதா, இவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் காஸ்மிக் கதிர் ஆய்வு மையத்தின் இயக்குனர். இந்த மையம் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக 2002 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வாங்கியிருப்பது உண்மைதான். இவர் குறிப்பிடும் காமியோகாண்டே ஆய்வகம் ஜப்பானிலுள்ள கிபு பிராந்தியத்தில் ஹிடா நகரத்தின் அருகிலுள்ள இக்கேனோ (mt.ikeno) மலைகளிலுள்ள மோஸுமி (mozumi) சுரங்கத்தில் அமைந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த மலைகளில் துத்தநாகம் (zinc) மற்றும் லேட்(lead) தாதுக்கள் 15ஆம் நூற்றாண்டிலேயே கண்டறியப்பட்டன. இதற்கான சுரங்கம் மற்றும் உற்பத்தி பணிகள் 1874 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இந்த சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனமான மிட்சுயின் துணை நிறுவனமான காமியோக்க சுரங்கங்கள் மற்றும் உருக்காலை நிறுவனத்திற்கு (Kamioka Mining and Smelting Co) சொந்தமானது. 1910 முதல் 1945 வரை சுரங்கப் பணிகளால் வெளியான கேட்மியம் அந்த பகுதியில் பெரிய சூழல் சீர்கேட்டை உண்டு பண்ணியது. "இட்ட-இட்ட" என்று அங்குள்ள மக்களால் அழைக்கப்பட்ட எலும்புகளை தொய்வடைச் செய்யும் நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அதன் பிறகு சுரங்க பணிகள் நிறுத்தப்பட்டாலும், உருக்காலைகள் செயல்பட்டு வந்தன. ஏற்கனவே சுரங்கங்கள் அமைந்துள்ள வடக்கு மோஸுமி பகுதியில் காமியோக்க நிலத்தடி ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை டோக்கியோ பல்கலைக்கழகம் 1982-ம் ஆண்டு துவக்கியது. பணிகள் முடிந்து 1983-ம் ஆண்டு முதல் ஆய்வுகள் துவங்கின. அதன் தரவுகள் இந்த மையத்திற்கு 2002 ஆம் ஆண்டு நோபல் பரிசை பெற்றுத்தந்தன. அதன் பிறகு சூப்பர் காமியக்கண்டே ஆய்வுகள் துவங்கின. 2009 ஆம் ஆண்டு ’டாக்கை முதல் காமியோக்க வரை’ (T2K) கற்றைகளை அனுப்பி சோதனை செய்யும் ஆய்வுகள் துவங்கின. மீண்டும் 2015-ம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வுகளுக்காக இந்த மையத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது.

சுந்தராஜன்

மேற்சொன்ன காணொளியில் இரண்டாவதாக பேசுபவர் பேரா.ஆர்தர் மெக்டொனால்ட். இவர் கனடா நாட்டிலுள்ள சாட்பரி நியூட்ரினோ ஆய்வகத்தின் இயக்குனர், குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர். 2015-ம் ஆண்டு நியூட்ரினோ ஆய்வுகளுக்காக இவருக்கும் நோபல் பரிசு கிடைத்தது. சாட்பரி ஆய்வகம் கிரெய்க்டன் நிக்கல் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கங்கள் கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்திலுள்ளன, 1901-ம் ஆண்டு துவங்கிய சுரங்கப்பணிகள் இன்னமும் நடைபெறுகின்றன, இன்னும் பத்தாண்டுகளுக்கு செயல்படும் அளவிற்கு அங்கே நிக்கல் தாது இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சுரங்கத்தில்தான் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் உலகத்தின் மிக ஆழமான இயற்பியல் ஆய்வகமான சாட்பரி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டது. 1999-ம் ஆண்டு மே மாதம் துவங்கிய ஆய்வுகள்  2006-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதியுடன் முடிவுற்றன. அதன் பிறகு பல்வேறு சாதனங்களுடன் ஆய்வகம் விரிவுசெய்யப்பட்டு SNOLAB ஆய்வகமாக மாறியது” என்றவரிடம் அண்டார்டிகா நியூட்ரினோ ஆய்வக மையத்தை பற்றி கேட்டோம்.

நியூட்ரினோ

மேலும், அண்டார்டிகா பனிப்பாறைகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வகத்தில் இருவர் பணிபுரிந்துவருவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த அண்டார்டிகா பனிப்பாறைகள் ஏன் முக்கியம், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அண்டார்டிக்காவின் பனிப்பாறைகள் வரலாறு காணாத வேகத்தில் உருகிவருவதாகவும், அதனால் கடல்மட்டம் அதிகரித்து மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போவதாகவும் சொல்கின்றன இரண்டு ஆய்வறிக்கைகள். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளிலுள்ள விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அண்டார்டிக் பனிப்பாறைகள் மூன்று மடங்கு அதிகமாக உருகிவருவதாகவும், (நியூட்ரினோ ஆய்வகம் கட்டிமுடிக்கப்பட்டது 2010ஆம் ஆண்டு), இதுவரை பதிவு செய்யப்பட்ட வேகத்தைவிட மிக வேகமாக மறைந்து வருகின்றன பனிப்பாறைகள் என்கிறது அந்த ஆய்வு.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நியூட்ரினோ ஆய்வகம் அமைந்ததே தவறு, அதையும் பெருமையாக பேசுவது எந்தவிதத்தில் எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. மனிதர்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியாதலால் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளை செய்து முடித்துள்ளனர்.

மேற்கண்ட மூன்று ஆய்வு மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது எந்தவிதமான பாதிப்பும் இல்லையே... பொட்டிபுரத்தில் மட்டும் எப்படி பாதிப்பு நிகழும்?

”மேற்சொன்னவற்றில் முதல் இரண்டு விஷயங்களில், ஏற்கனவே உள்ள சுரங்கத்தில்தான் 'நியூட்ரினோ ஆய்வுகள்' மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவிலும் ஏற்கனவே உள்ள கோலார் தங்கவயலில் தொடங்கிய நியூட்ரினோ ஆய்வுகளை தொடர்வதில் எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் ஏன் ஆய்வுகளை அங்கே தொடரவில்லை என்று தெரியவில்லை. கேள்விகள் கேட்டால், அந்த சுரங்கத்தில் தண்ணீர் கசிவு உள்ளது, அதனால் தொடர முடியவில்லை என்று பதில் வருகிறது. சில கோடிகள் செலவழித்து தண்ணீர் கசிவை சரிசெய்வது சரியா அல்லது மேற்கு தொடர்ச்சி மலை போன்ற சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பல கோடிகள் செலவழித்து, லட்சக்கணக்கான டன் பாறைகளை உடைத்து புதிதாக சுரங்கங்கள் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்வது புத்திசாலித்தனமா என்பது தெரியவில்லை.”

முரண்பாடான கருத்துக்களை தவிர்க்க இனியாவது நியூட்ரினோ விஷயத்தில் மத்திய அரசும், ஆராய்ச்சியாளர்களும்  முழுயான தகவல்களை மக்களுக்கு வெளியிட வேண்டும்.