பறவைகள் வரத்து குறைவு! - பொலிவின்றி காணப்படும் வேடந்தாங்கல் | Birds count reduced at Vedanthangal Birds sanctuary

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:04 (08/12/2018)

பறவைகள் வரத்து குறைவு! - பொலிவின்றி காணப்படும் வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குச் செப்டம்பரிலேயே சீஸன் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்தும் பறவைகள் இல்லாமல் கலையிழந்து காணப்படுகிறது வேடந்தாங்கல்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நவம்பர் மாதத்திலிருந்து பறவைகள் அதிகம் வரத்தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே சுற்றுலாப் பயணிகளும் வேடந்தாங்கலுக்கு அதிக அளவில் வரத் தொடங்கிவிடுவார்கள். கடந்த வருடம் தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து இருந்தது. அதுபோல் வடகிழக்குப் பருவமழையும் ஓரளவு பெய்து ஏரிகள் நிரம்பியதால் விவசாயப்பணிகள் நடைபெற்றன. இதனால் நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்க்காகம், சிறிய நீர்க்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட 30,000-க்கும் மேற்பட்ட சுமார் 20 வகையான பறவைகள் டிசம்பர் மாதத்தில் வந்திருந்தன. ஆனால், இந்த வருடம் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனது, கஜா புயலுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழையே பெய்தது. வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் இல்லாததால் பறவைகள் ஏமாற்றத்துடன் காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர், களியனூர், நத்தப்பேட்டை போன்ற ஏரிகளில் தற்காலிகமாகத் தங்கி இரைதேடுகின்றன. இதனால் பறவைகளின்றி சரணாலயம் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

 

கஜா புயலின்போது வளையபுத்தூர் ஏரியிலிருந்து வந்த தண்ணீர் ஓரிரு நாள்களிலேயே நின்றுவிட்டது. ஏரியில் கொஞ்சம் இருந்த தண்ணீரும் வற்றிக்கொண்டிருக்கிறது. செயற்கையாக நீரைக் கொண்டுவந்து ஏரியில் தண்ணீர் நிரப்பினாலும் பறவைகள் வராது. அவை இரை தேடுவதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீர் இருக்க வேண்டும். விவசாயம் நடைபெற வேண்டும். இனப்பெருக்கம் செய்வதற்கு தகுந்த சூழல் இல்லாமல் போனால் பறவைகள் மாற்று இடங்களைத் தேடி சென்றுவிடும். அங்கும் சாதகமான சூழல் இல்லையென்றால் இனப்பெருக்கம் செய்யாது. வேடந்தாங்கலில் தற்போது உள்ளூர் பறவைகள்தான் இருக்கின்றன. வேடந்தாங்கலுக்குக் கரண்டி வாயன் பறவைகள் குறைவாகத்தான் வரும். இந்த ஆண்டு வந்த அந்த பறவைகளும் மற்ற பறவைகளைப்போல வெளியில் சென்றுவிட்டது. அடுத்த சில தினங்களில் மழைபெய்து, பறவைகள் வந்து தங்கினால் மட்டுமே சரணாலயம் மீண்டும் உயிர்பெரும். 

பறவைகள் இனப்பெருக்கம் செய்யாமல் போனால், அந்தப் பறவையினங்கள் குறைந்துவிடும். மாறிவரும் பருவநிலை மாற்றம் சூழியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் வேடந்தாங்கல் பறவைகளும் பாதிக்கப்படுகின்றன எனச் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். 

கடந்த வாரம் வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வேடந்தாங்கலுக்கு வந்து திறக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் 6-ம் தேதி சரணாலயம் திறக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க