`சிறப்புச் சட்டம் இயற்றுங்கள்!’ அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு கோரிக்கை | Special law should be passed to close the sterile says anti sterlite group

வெளியிடப்பட்ட நேரம்: 10:19 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:04 (08/12/2018)

`சிறப்புச் சட்டம் இயற்றுங்கள்!’ அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு கோரிக்கை

மேக்கே தாட்டூ அணைக்கு எதிராகத் தமிழக அரசு சிறப்பு சட்டமன்றம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியதுபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும், அதேபோல தூத்துக்குடி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழு

தமிழக அரசு  ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிராக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனத்தின் நேற்றைய விசாரணை, வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் நிறுவனருமான ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா பாபு தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தூத்துக்குடி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, காத்திருந்த ஒன்றாக இருந்தது.

ஸ்டெர்லைட்

இந்நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணையை வரும் 10-ம் தேதி, திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது பசுமைத் தீர்ப்பாயம். இத்தீர்ப்பாயம் நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் குழு அறிக்கை சமர்ப்பித்து பல நாள்கள் ஆகிவிட்டது. முதலில் தலையீட்டாளர்களில் ஒருவரான எங்களுக்கும் அந்த அறிக்கை தரப்படவில்லை. ஆரம்பத்தில், ஆலை இயங்கலாம் என தருண் அகர்வால் குழு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அக்குழுவின் 205 பக்க அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் சில அம்சங்களை இப்போதுதான் அனைவராலும் அறிந்துகொள்ள முடிந்தது.

அதன்படி நாங்கள் புரிந்துகொண்டிருப்பது, தமிழக அரசு, மாசுக் கட்டுபாட்டுவாரியம், தலையீட்டாளர்கள் நாங்கள் ஆலைக்கு எதிராக முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உண்மை என அந்த அறிக்கையில் அக்குழு உறுதி செய்துள்ளது. ஆலை செய்திருக்கும் அத்துமீறல்களை அந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. நாம் முன்வைத்த 5 குற்றச்சாட்டுகளில், 3 குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது. மக்களும் அரசும் சமூக ஆர்வலர்களும் சொன்னது உண்மை என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

அதே நேரத்தில் ஆலை இயங்கலாம் என்ற பரிந்துரையையும் குழு தெரிவித்துள்ளது. இது கேலிக்கூத்தானது. மேக்கே தாட்டூ அணைக்கு எதிராக சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டியதுபோல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அதேபோல் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடந்த வேண்டும். ஆலையைத் திறக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க