வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:25 (08/12/2018)

`அவர்கள் ஒரு மாநிலம்தான்; நாங்கள் 19 மாநிலம்’ - தமிழிசை தடாலடி!

தமிழிசை

தாமரை மலர தலைகீழாக நடக்கத் தேவையில்லை. நேர்மையாக நடந்தால் போதும் என பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முத்தரசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆட்சி செய்கிறது. 19 மாநிலங்களில் பி.ஜே.பி ஆட்சி செய்து வருகிறது. ஆகையால், காவியைப் பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். பலவீனமாக உள்ள அவருடைய கூட்டணி குறித்துதான் முத்தரசன் கவலைப்பட வேண்டும். வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் எம்.எல்.ஏ எம்.பி-க்களை பார்க்க வேண்டுமானால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தாக வேண்டும். தமிழகத்தில் நிச்சயம் காவிக்கொடி பறக்கும்.

முத்தரசன்

பிரிவினை பேசி அதன்மூலம் அரசியல் லாபத்தைப் பெற்றவர் வைகோ. இப்போது அவர் நிலை தடுமாறிய நிலையில் இருக்கிறார். மேக்கேதாட்டூவில் ஆய்வுசெய்ய அனுமதி கொடுத்ததையே ஒப்புதல் கொடுத்ததுபோல பேசிவருகிறார்கள். மேக்கே தாட்டூவில் அணைக்கட்டுவதால் தமிழகத்துக்குப் பாதிப்பு என்றால், நிச்சயம் அனுமதி கொடுக்கமாட்டார்கள். மத்திய நீர்வளத்துறை ஆணையரே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது எனக் கூறியுளார். எதையும் ஆராயாமல் பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் எதற்கெடுத்தாலும் போராடுவது சிலரிநின் வேலையாக உள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் சட்டத்துக்குட்பட்டு என்ன நடக்குமோ… அது நடக்கும். அரசியவாதிகள் செய்வதுபோல் சட்டத்தை வளைக்க முடியாது. கோவையில் ஜெயலலிதா சிலையிடம் மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்திருப்பது தவறு அவர்களை விடுவிக்க வேண்டும்.

நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துள்ளோம். நிச்சயம் ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். மீண்டும் மோடிதான் பிரதமராக இருக்க வேண்டும் என்று கடந்த முறையைவிட 4 சதவிகிதம் பேர் அதிகமாகத் தெரிவித்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வதில் பிரதமரின் மோடி பங்கு இருப்பதாக சவுதி அரேபியாவின் எண்ணெய்த்துறை அமைச்சர் தெரிவித்ததன் மூலம் இந்தியாவில்  மட்டுமல்ல உலக அளவில் பிரதமர் மோடி அசைக்க முடியாத சக்தியாக உருமாறியுள்ளார்" என்றார்.