`முடிந்தால் தலைவரை மாற்றட்டும்!' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குத் திருநாவுக்கரசர் சவால்! | thirunavukarasar slams evks ilangovan

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (08/12/2018)

`முடிந்தால் தலைவரை மாற்றட்டும்!' - ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குத் திருநாவுக்கரசர் சவால்!

தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம்; ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வர வாய்ப்பில்லை எனத் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடையேயான மோதல் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் ஒருவரையொருவர் அவ்வப்போது வசைபாடுவது வழக்கமாகி வருகிறது. இவர்களைப் போலவே இவர்களின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர் `ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விமர்சித்தார். 

``இளங்கோவன் என்னை மட்டும் திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அவர் யாரைத் திட்டாமல் விட்டிருக்கிறார். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தங்கபாலு, செல்லகுமார் என யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களை வசைபாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவதற்கு முயலுகிறேன் என டெல்லி சென்றுகொண்டே இருக்கிறார். 

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

அவரது முயற்சிக்கு எனது வாழ்த்துகள். அவரால் முடிந்தால் தலைவரை மாற்றட்டும். ஆனால், இளங்கோவன் மட்டும் காங்கிரஸ் தலைவராக இனி வர முடியாது. தமிழக காங்கிரஸ் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வர வாய்ப்பே இல்லை" என்றார். 

தொடர்ந்து பேசியவர், ``டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை" எனக் குற்றம் சாட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க