வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:14:00 (08/12/2018)

`தி.மு.க-வுக்கு செல்கிறாரா செந்தில்பாலாஜி?’ - கரூரை பரபரக்க வைத்த வதந்தி

      செந்தில் பாலாஜி

கரூர் அரசியல் வட்டாரத்தை பரபரப்பாகி இருக்கும் தகவல், `செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்குத் தாவப்போறாராம் இல்லே. அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க வேட்பாளர் அவர்தானமுல்ல' என்பதுதான். இதனால்,அ.ம.மு.க, அ.தி.மு.க, தி.மு.க என்று மூன்று கட்சிகள் தரப்பிலும் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் செந்தில்பாலாஜி இருக்கிறார். முன்னாள் அமைச்சரான இவர், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார். ஆனால்,சமீபத்தில் வெளிவந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்த வழக்கில் தீர்ப்பில் இவரும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்நிலையில், `அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் மறுபடியும் எம்.எல்.ஏ ஆகியே தீருவது' என்று தொகுதியை பம்பரமாகச் சுற்றி வருகிறார் செந்தில்பாலாஜி.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கிராமம் கிராமாகச் சென்று, பூத் கமிட்டியை அமைப்பது, வார்டு செயலாளர்களை ஊக்கப்படுத்துவது என்று வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில், அவரது அரசியல் எதிரியான போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு, `இந்தமுறை செந்தில்பாலாஜியை ஜெயிக்க விடக்கூடாது. அ.தி.மு.க வேட்பாளர்தான் ஜெயிக்கணும்' என்ற முனைப்பில் இருக்கிறது. செந்தில்பாலாஜியை சுணக்கம் அடைய வைப்பதற்காகத் தொகுதி முழுக்க இருந்து அ.ம.மு.க நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரை அ.தி.மு.க-வுக்குள் இழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறது அமைச்சர் தரப்பு.

செந்தில் பாலாஜி

சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தொகுதி முழுக்க செலுத்தப்பட்டது. அதற்காக அரவக்குறிச்சியில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்துக்கும் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற மௌன அஞ்சலி கூட்டத்துக்கும் அமைச்சர் தரப்பு ஆள்கள் 100 கார்களில் போய் அதகளம் செய்தனர். இந்நிலையில்தான், நேற்று முதல், 'செந்தில்பாலாஜி தி.மு.க-வுக்கு தாவ போகிறார்' என்ற அதிரிபுதிரி தகவல் பரவி கரூர் அரசியலை சூடாக்கி இருக்கிறது.

கே.சி.பழனிச்சாமி(தி.மு.க)
 

இதுசம்பந்தமாக, கரூர் மாவட்ட அரசியலை நன்கு கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம்.
 "அ.ம.மு.க-வின் முக்கியத் தூண்களில் செந்தில்பாலாஜியும் ஒருவர். எல்லாரையும்விட டி.டி.வி.தினகரன் அதிகம் நம்புவதும் இவரைத்தான். அதனால், அவர் தி.மு.க-வுக்கெல்லாம் தாவமாட்டார். இது வதந்திதான், இந்த வதந்தியைக் கிளப்பியதே அ.தி.மு.க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பும், கரூர் மாவட்ட தி.மு.க-வின் ஒரு பிரிவினரும்தான். அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி தொகுதி வேலைகளை பக்காவாகச் செய்துகொண்டிருக்கிறார். இது அ.தி.மு.க தரப்புக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், 'தி.மு.க-வுக்குத் தாவுகிறார் செந்தில்பாலாஜி' என்ற வதந்தியைக் கிளப்பி இருக்கிறார்கள். இதனால்,செந்தில்பாலாஜியின் கவனம் சிதறும், அவரது செயல்பாடுகள் கம்மியாகும் என்ற வியூகத்தில்தான் அப்படி கிளப்பி இருக்கிறார்கள். அதேபோல், கரூர் மாவட்ட தி.மு.க-வை கெட்டியாக வைத்திருந்தது கே.சி.பழனிசாமிதான். அவரது பணபலமும் படைபலமும் சேர்ந்துதான் கரூர் தி.மு.க-வை தெம்பாக வைத்திருந்தது. அந்தக் கட்சித் தலைமையே அவரை மட்டும்தான் நம்பி இருந்தது. ஆனால், அவருக்கு வியாபாரத்தில் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு, அதனால் அவர் அரசியலைவிட்டே கிட்டத்தட்ட துறவறம் பூண்ட நிலைக்கு வந்துவிட்டார். தி.மு.க-வின் மாவட்டச் செயலாளராக இருக்கும் நன்னியூர் ராஜேந்திரனால் பணரீதியாகவோ செயல்பாடு ரீதியாகவோ சமுதாய ரீதியாகவோ சிறப்பாக இருக்க முடியவில்லை. இதனால், 'தி.மு.க மாவட்ட தலைமைக்கு தகுதியான ஆள் தேவை. அது செந்தில்பாலாஜி மாதிரியான ஆளாக இருந்தால் நல்லது' என்ற கோணத்தில் நன்னியூர் ராஜேந்திரனை மாவட்டச் செயலாளராக இருக்கவிட விரும்பாத சிலர் இந்த வதந்தியை அ.தி.மு.க-வினர்களோடு சேர்ந்து கிளப்பிவிட்டிருக்கிறார்கள்" என்றார்கள்.

நன்னியூர் ராஜேந்திரன்(தி.மு.க கரூர் மாவட்ட செயலாளர்)


 இந்நிலையில்,கரூர் வந்த செந்தில்பாலாஜியிடம் பத்திரிகையாளர்கள் சிலர் இதுகுறித்து கேட்டபோது, ``நான் அ.ம.மு.க-வை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்" என்று சொல்லி இருக்கிறார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் கேட்டால், ``நாடகம் நடத்துவதில் செந்தில்பாலாஜி கைதேர்ந்தவர். அதில் ஒன்றுதான், அவரே கிளப்பிவிட்ட இந்த விசயமும். அரவகுறிச்சி தொகுதியில் அ.தி.மு.க-வுக்குதான் செல்வாக்கு இருக்கு. அதோட அண்ணன் அ.ம.மு.க-வைச் சேர்ந்த பலரை இழுத்துகிட்டு இருக்கார். அந்தப் பதற்றத்தில்தான் இப்படி அவரே தி.மு.க-வுக்கு போகப் போறதா செய்தி பரப்பி இருக்கார்" என்றார்கள். தி.மு.க தரப்பில் கேட்டால், "இந்த பரபரப்பை நாங்கள் பண்ணலை. செந்தில்பாலாஜியே கிளப்பி இருக்கலாம்" என்றார்கள்.