``ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்” - எச்சரிக்கும் வைகோ | If Sterlite Is Reopened People Struggle Will get intensified, says vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (08/12/2018)

``ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்பட்டால் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்” - எச்சரிக்கும் வைகோ

``ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என்பதுதான் தூத்துக்குடி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் மக்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்” என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காகப் பசுமைத் தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்டதுதான் தருண் அகர்வால் குழு. ஆனால், ஆலையை மீண்டும் திறக்கலாம் எனப் பரிந்துரை கூற அந்தக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டத்தில் இந்தப் பரிந்துரைக்கு இடமில்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சரியாகச் செயல்படவில்லை. இது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாகிப் போனது.

பசுமைத் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணை வரும் 10-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று, 20 நிமிடம் தீர்ப்பாயத்தில் வாதாட அனுமதி கேட்க உள்ளேன். அனுமதி தராதபட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். ஆலையை மீண்டும் இயக்கலாம் என பசுமைத் தீர்ப்பாயம் கூற வாய்ப்புள்ளது. ஆலை இயங்கக் கூடாது என்பதுதான் தூத்துக்குடி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. மீண்டும் ஆலை திறக்கப்படும் நிலை வந்தால் மக்களின் போராட்டம் வேறு வடிவம் எடுக்கும்.

அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு முயற்சி செய்கிறது. அணை மசோதா கொண்டு வரப்பட்டால் சோவியத் ரஷ்யாவைப்போல இந்தியா துண்டு துண்டாக மாறும். இதனால், தமிழகம் முழுமையாகப் பாதிப்படும். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காததுபோல, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசும் தீர்ப்பை மதிக்காது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி மேக்கே தாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்யும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு எதிராகச் செயல்பட்டால் தனித் தமிழ்நாட்டை இளைஞர்கள் கேட்கும் நிலை ஏற்படும். காவிரி முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மறைந்த ஜெயலலிதா அரசு சிறப்பாகச் செயல்பட்டது. தற்போதைய எடப்பாடி அரசு முதுகெலும்பு இல்லாமல் செயல்படுகிறது” என்றார்.

    

நீங்க எப்படி பீல் பண்றீங்க