வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:18:33 (08/12/2018)

பாதுகாப்பற்ற கேன் வாட்டர்; நிறுவன உரிமையாளருக்குச் சிறை!  #Korattur

பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற கேன் வாட்டரை சப்ளை செய்த கொரட்டூர் குடிநீர் கம்பெனியின் உரிமையாளருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கேன் வாட்டர்
 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் குடிநீர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து 3 மாவட்டங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 20 லிட்டர் கேன் குடிநீர், 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கேன்  குடிநீர் குடிக்க தகுதியற்றது என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறைக்கு வரும் புகார்களின் பேரில் ஆய்வு நடத்தப்படும். இதுத்தவிர உணவகங்கள், குடிநீர் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு நடத்துவதுண்டு. 

கேன் வாட்டர்

 

இந்தநிலையில் கடந்த 15.9.2016ல் கொரட்டூர் பகுதியில் செயல்படும் ராயல் அக்வா என்ற குடிநீர் நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. குடிநீர் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனையில் சம்பந்தப்பட்ட குடிநீர் குடிக்க தகுதியற்றது என ரிப்போர்ட் வந்தது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயவேல் அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா ஆனந்த், சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவன உரிமையாளருக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் 25000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறுகையில்,  50க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளோம்.2011ம் ஆண்டு முதல் இதுவரை 34 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக ராயல் அக்வா என்ற குடிநீர் நிறுவன உரிமையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களின் புகார்களை 9444042322 என்ற நம்பரில் தெரிவிக்கலாம் என்றனர்.

பூந்தமல்லியில் பிரபலமான உணவகத்துக்கு (கே.எப்சி) 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை செலுத்தவில்லை. இதனால் உணவகத்துக்கு சீல் வைத்தபிறகு அபராத தொகை செலுத்தப்பட்டது. தண்டனை பெற்ற குடிநீர் கம்பெனியையும் சீல் வைக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.