வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (08/12/2018)

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தரத் தலைவர்! - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 


காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராகத் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அணை கட்டும் முடிவு இருப்பதாகக் கூறி கர்நாடக அரசுக்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது. 

காவிரி ஆறு


அதேபோல், மேக்கே தாட்டூ விவகாரம் தொடர்பாக தவறான புரிதல் இருப்பதாகவும், இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கவும் கோரி கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார். மேக்கேதாட்டூ அணை விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டு தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

தமிழக சட்டப்பேரவை

இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், `காவிரி மேலாண்மை வாரியத் தலைவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும். மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான அனுமதியை அளித்தது மத்திய நீர்வள ஆணையம். எனவே, அந்த ஆணையத்தின் தலைவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருக்கக் கூடாது. எனவே, அவரை மாற்றிவிட்டு சுதந்திரமாகச் செயல்படும் ஒருவரை காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேக்கேதாட்டூவில் கர்நாடக அமைச்சர் ஆய்வு


உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் இடைக்காலத் தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் பதவி வகித்து வருகிறார். மேலும், காவிரி நதிநீரைப் பங்கிட மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு செயல்திட்டத்தை தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைத் தயாரிக்க அனுமதி கிடைத்த நிலையில், அந்தப் பகுதியில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதன்மூலம், கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை கட்டுவதற்கான பணிகளை அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கிறது.