வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:18:30 (08/12/2018)

`யார் என்ன சொன்னாலும் போயஸ் வீடு எங்களுக்குக் கோயில்தான்!’ - உடுமலை ராதாகிருஷ்ணன்

யார் என்ன சொன்னாலும், போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்குக் கோயில்தான் என்று திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் இன்று நடைபெற்ற அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சுமார் 643 பயனாளிகளுக்கு ரூபாய் 1.6 கோடி மதிப்பீட்டில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், கோமாரி நோயின் தாக்கம் அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் 85 மருத்துவ குழுக்களும், திருப்பூர் மாவட்டத்தில் 45 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு கோமாரி நோய்க்கான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. இதனால் தற்போது கோமாரி நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளன. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் டிசம்பர் 25-ம் தேதி வரை கால்நடை சந்தைகள் நடத்துவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தடை விதித்திருக்கிறோம்’’ என்றார்.

போயஸ்

அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதைப் பற்றிச் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அப்போது, ``போயஸ்கார்டன் வேதா இல்லம் என்பது எங்களின் அம்மா வாழ்ந்த வீடு. நாங்கள் எல்லாம் கோயிலாக மதிக்கும் அந்த வீட்டைப் பற்றி யாரும் எந்தவிதமான தவறான கருத்தும் சொல்லிவிட முடியாது. அப்பகுதியில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும், எங்களுக்கு அந்த இடம் கோயில்தான்’’ என்றுகூறிவிட்டுச் சென்றார் அமைச்சர்.