பிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம்! - தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி | TN government to change english, sanskrit names of villages, streets into Tamil, says Minister Mofoi Pandiarajan

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/12/2018)

பிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம்! - தமிழ் வளர்ச்சித் துறை முயற்சி

தமிழக அரசின் ஆவணங்களில் ஆங்கிலத்தில் உள்ள 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்கள், தெருக்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்


மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் விழா வரும் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வானவில் பண்பாட்டு மையத்துடன் இணைந்து தமிழ் வளர்ச்சித் துறை `தேசபக்தி விழா’ என்ற பெயரில் சென்னை கலைவாணர் அரங்கில் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன், பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்


நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழக அரசு ஆவணங்களில் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கு வருவாய்த் துறைதான் அதிகாரம் படைத்தது. இதனால், மாவட்ட ஆட்சியர்கள் அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஊர்கள், சாலைகள், தெருக்களின் சம்ஸ்கிருதம், ஆங்கிலப் பெயர்களைத் தமிழில் மாற்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், Triplicane இனி திருவல்லிக்கேணியாகவும் Tuticorin தூத்துக்குடியாகவும் மாறும் என்பதைக் கூறிக் கொள்கிறேன். இதுபோல, 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும்’’ என்றார்.