வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (08/12/2018)

`வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்துங்கள்!’ - விகடன் விழாவில் சுட்டிகளுக்கு மதுரை கமிஷனர் அறிவுரை

மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற சுட்டி விகடன் விழாவில் போலீஸ் கமிஷனர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்

சுட்டி விகடன் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து, `மதுரை 200’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மன்னர் கல்லூரி இயக்குநர் ராஜா கோவிந்தசாமி, ரோட்டரி நிறுவன இயக்குநர் வெள்ளையப்பன், கிரம்மர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசுகையில், ``மாணவர்களுக்கு அவசியமான தேர்வை நடத்தி முடித்த 
விகடன் குழுமத்திற்கும் ரோட்டரி சங்கத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில்லா, மரணமில்லா மதுரையை உருவாக்க காவல்துறை சார்பில் பல சீரிய முயற்சிகளை எடுத்துட்டு வர்றோம். ஒரு வருடத்தில் மதுரை மாநகரில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை 1,000. இதில், விபத்துக்குள்ளாகி அதிக அளவில் இறப்பைச் சந்திப்பது 15 முதல் 25 வயதுக்கு உட்டபட்டவர்கள்தான். பெற்றோருடைய அனுமதி இல்லாமல், பெற்றோருக்குத் தெரியாமல் டூவிலரை எடுத்துட்டு விபத்தை ஏற்படுத்துற பள்ளி மாணவர்கள் அதிகமாகி வருகின்றனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கூட்டத்தில் ஒரு பகுதியினர்

பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்கணும். எப்பவும் டி.வி, மொபைல்னு இருக்குற குழந்தைகளை புத்தகங்களை படிக்க ஊக்குவிங்க வெளி உலகத்துக்கு கொண்டு வாங்க. குழந்தைகள் திறமைகளை வளர்த்துக்கோங்க. அதற்கான தளமும், அங்கீகாரமும் உங்களைத் தேடி வரும்’’ என்றார்.