கஜா புயலால் டெல்டா மாவட்ட பள்ளிக் குழந்தைகளின் நிலை என்ன? | The situation of children after gaja storm

வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (08/12/2018)

கடைசி தொடர்பு:19:27 (08/12/2018)

கஜா புயலால் டெல்டா மாவட்ட பள்ளிக் குழந்தைகளின் நிலை என்ன?

கஜா புயலில் பல குழந்தைகள் வீடுகளை இழந்து வாழ்வியலின் அடுத்த கணத்திற்காக போராடுகின்றனர். குழந்தைகளின் வீடுகள் மீதான பார்வை மற்றவர்களுடையதைவிட வேறுபட்டது.

கஜா புயலால் டெல்டா மாவட்ட பள்ளிக் குழந்தைகளின் நிலை என்ன?

காவிரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றால் சபிக்கப்பட்ட மக்களை கஜா புயலும் சேர்ந்து பழி வாங்கியுள்ளது. ஆண்டுக்கு ஆறு லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம்  தமிழகத்தின் பசியைப் பூர்த்தி செய்கிறது தஞ்சை மாவட்டம். கஜா புயலுக்குப் பிறகான இன்றைய சூழலில் டெல்டா மக்களின் வாழ்வு, நிவாரணப் பொருள்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக மாறியுள்ளது. புயலின் கருணையற்ற கோரத்தாண்டவத்தால் வயசு வித்தியாசமின்றி எல்லா மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசும். நிவாரணப் பணியில் ஈடுபடுபவர்களும் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் உலகத்தைக் கண்டுகொள்ளாமல் போனதுதான் வேதனை.

கஜா

மரம், மழை, இயற்கை எல்லாம் குழந்தைகளின் வாழ்வியலோடு மிக நெருக்கமானவை. இயற்கையின் இந்தப் பெரும் சீற்றம் குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை ஏற்படுத்தும் பெரும் துயரங்களின் போதெல்லாம் குழந்தைகளின் உலகம் கவனிக்கப்படாமலே சென்று விடுகின்றன.

பல குழந்தைகள் வீடுகளை இழந்து வாழ்வியலின் அடுத்த கணத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. குழந்தைகளின் வீடுகள் மீதான பார்வை மற்றவர்களுடையதைவிட வேறுபட்டது. குழந்தைகளுக்கு வீடுகள் என்பது தங்களின் நினைவுகளைப் புதைத்து பாதுகாக்கும் இடம். புயலில் இடிந்து விழுந்த வீட்டுச் சுவர்களுக்கிடையே தங்களின் பால்யத்தின் நினைவுகளைப் தொலைத்துவிட்டு  அழுது கொண்டிருக்கிறார்கள் அந்த டெல்டா குழந்தைகள்.

கஜா புயல்

குழந்தைகளுக்கு  எப்போதும் ஆதரவாக இருப்பவை பள்ளிக்கூடங்கள்தான். கதவுகள் இல்லாத வீடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும்  உட்கார்ந்து படிக்க மேசைகளைத் தருபவை அரசு பள்ளிக்கூடங்கள். அவையும் இன்று குழந்தைகளை ஏமாற்றிவிட்டன. கஜா புயலால்  டெல்டா பகுதியில் உள்ள பல அரசுப் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்தும், சில பள்ளிகள் முழுமையாக இடிந்தும் உள்ளன. நாகை மாவட்டத்தில் உள்ள பல உயர்நிலைப் பள்ளிகள் ஓட்டு கட்டிடங்கள்தான். அவையும் இன்று நீடிக்கவில்லை. கட்டடங்கள் மட்டுமின்றி, பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்டவையும் சிதிலமடைந்து பெரும் பொருட்செலவுகளை ஏற்படுத்தியுள்ளது.

சேதமடைந்த இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு பல ஆண்டுகளாகப் படிப்படியாக கட்டமைக்கப்பட்டவை. கடந்த நிதியாண்டில் தமிழகப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளுக்கு மொத்தம் 333 கோடி ரூபாய் மட்டுமே  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்டா பள்ளிக்கூடங்களில் ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சீரமைத்து மறு கட்டமைப்புகளை மேற்கொள்ளவே பல கோடிகள் செலவிட வேண்டும். செலவுகள் ஒருபுறமிருக்கக் காலத்தை மற்றொரு முக்கிய காரணியாகப் பார்க்க வேண்டியுள்ளது.

கஜா புயல்

10, +1, +2 பொதுத்தேர்வுகளுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் குறித்து அரசு எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பல தலைமுறைகளாய் வளர்த்த மரங்களும், வீடுகளையும் இழந்துள்ளவர்கள் தங்களின் இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் ஆகும் என்ற இந்தச் சூழலில் அவர்களின் தேர்வுகள் என்பது அவர்களின் சுமையை அதிகப்படுத்தும் எப்போதும் எடுக்கும் மதிப்பெண்களைவிடக் குறைவான மதிப்பெண்களைத்தான் இந்தச் சூழலில் அவர்களால் எடுக்க முடியும்.

புயலில் தங்களின் பாடப் புத்தகங்களையும், பள்ளி உடைமைகளையும் மாணவர்கள் இழந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான 4 லட்சம் புத்தகங்கள் தயாராக உள்ளது எனத் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி கூறியுள்ளார். இந்நிலையில் குழந்தைகள் பாடப்புத்தகங்களை மட்டும் இழக்கவில்லை பல கிராமங்களில் மக்கள் தங்களின் உடைகளை எல்லாம் இழந்துள்ளனர். அவற்றில் பள்ளிச்  சீருடைகளும் அடங்கும் . அவர்களுக்கான சீருடைகள், புத்தகப் பைகள், செருப்புகள் போன்றவற்றிற்கும் அரசு வழிவகை செய்ய வெண்டும்.

கஜா புயல்

தமிழகத்தில் பல  கிராமப் புறங்களில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்துபவர்கள் குழந்தைகள்தான், அவர்களில் பெரும்பாலானோர் முதல்தலைமுறையாக பள்ளிக்கூடங்களுக்குச் செல்பவர்கள். புயலில் இடிந்துள்ள நூலகக் கட்டடங்கள், அவர்களின் கனவுகளைச் சிதைத்துள்ளது. புயலில் இடிந்துபோன இந்த நூலகங்கள் எல்லாம் கிராமங்களை நோக்கி வர பல ஆண்டுகள் ஆகின. கஜா புயல் மீண்டும் டெல்டா குழந்தைகளை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே விவசாயத்தை மேற்கொள்ளும் மக்கள் அதன் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர். டெல்டாவை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு குறு விவசாயிகளும், விவசாயக் கூலிகளின் எண்ணிக்கையும். அதிகம்.  புயலுக்குப் பிறகு தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு, அரசின் நிவாரணப் பணியும், சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடும் கொடுப்பதில் ஏற்படும் தாமதம். வருங்காலங்களில் அவர்கள் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு வழி வகுக்கும். இந்தச் சம்பவங்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாகத்தான் மாற்றுவார்கள்.

நாகையில் பள்ளிகள் முகாம்களாக பயன்படுத்தப் பட்டுவருகின்ற நிலையில். அங்குத் தங்கியுள்ள மக்களையும் பள்ளி திறக்கப்போவதாகச் சொல்லி வெளியேற வற்புறுத்து கின்றன. அரசு மக்களின் குடியிருப்புகளை சீரமைப்பது பற்றியான தகவல்கள் வழங்காத நிலையில் மக்களை முகாம்களில் இருந்து வெளியேற்றுவது எப்படிச் சரியானதாக அமையும்.
தங்கம் தென்னரசு

இதுகுறித்து முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் பேசுகையில், “குழந்தைகளின் கல்வி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் வாழ்வும் முக்கியம். முதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனரீதியான உள்ள பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். அரசு தன்னுடைய நிதியை முதலில் பள்ளிகளை சீரமைக்கும் பணிகளுக்கு செலவிட வேண்டும். ஏனெனில் அவற்றில்தான் குழந்தைகளின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

மழையில் பாடப்புத்தகங்கள் எல்லாம் நனைந்து வீணாகியதால் அவர்களுக்கான பாடப்புத்தங்கள் விரைந்து மாணவர்களைச் சென்றடைய அரசு வழிவகை செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டியதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் அனைத்து ஊராட்சி மன்றத்திலும் நூலகங்கள் உள்ளன. அவற்றில் பெருவாரியானவை பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளன அவற்றில் உள்ள புத்தகங்களை எல்லாம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கலாம். எல்லாவற்றையும்விட உடனடியாக செய்ய வேண்டியது குழந்தைகளின் மறு வாழ்வு” என்றார்.

நாகை மாவட்டத்தில் நரிக்குறவர்களின் குழந்தைகளுக்காக பள்ளி நடத்தி வரும் ரேவதி பேசுகையில், “குழந்தைகள் தங்களுடைய குடிசை விழும் காட்சிகளை எல்லாம் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேதாரண்யம் , தலைஞாயிறு போன்ற பகுதிகளில் குடிசைகள் அதிகம். அங்குள்ள குழந்தைகள் வீடுகளை  இழந்த நிலையில், மின்சாரம், சுகாதாரமான தண்ணீர் போன்றவை இல்லாத சூழல் குழந்தைகளின் சோகத்திலிருந்து விடுவிக்காமல் வைத்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் மறுகட்டமைப்புக்கு உடனடியாக நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்றார்.

இந்த மன இறுக்கமான சூழலில் இருந்து குழந்தைகளை விடுவிக்க அரசும், மக்களும்  கைகோர்த்து செயலாற்ற வேண்டிய காலமிது. ஏற்கனவே சமூகத்தில் குழந்தைகளுக்கான  இடங்கள் குறைவு. அந்த வெற்றிடத்தை நிரப்பி டெல்டா குழந்தைகளின் வாழ்வை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது.


டிரெண்டிங் @ விகடன்