வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (08/12/2018)

கடைசி தொடர்பு:20:54 (08/12/2018)

`துயரத்திலிருந்து மீண்டு எழுவோம் என்று சாவால்விட்டு செயல்படுங்கள்!’ - தஞ்சாவூரில் வைரமுத்து பேச்சு

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் தஞ்சாவூரில் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

வைரமுத்து

தஞ்சாவூர் வல்லம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புயலால் பாதிக்கப்பட்ட பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, நாகை பகுதி மக்களுக்கு 1008 ஆடுகளைக் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது, ``புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது. அந்நிய முதலீடு கிடைத்தால், அதை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும். உயர் விளைச்சல் ரக தென்னங்கன்றுகளை இறக்குமதி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

புயல் பாதிப்பு தொடர்பாகத் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதாது. எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தைக் கணக்கிட்டு, அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் மண்ணை மீட்டெடுக்க வேண்டும். இந்த துயரத்திலிருந்து மீண்டு எழுவோம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்விட்டு செயல்பட வேண்டும்.

கஜா புயல்

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மேலும், சேதமடைந்த விவசாய நிலத்தையும் மீட்டுக் கொடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சிறப்பு பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.  டெல்டா மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. எனவே மத்திய அரசும் கர்நாடக அரசும் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இதில், கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க