வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (08/12/2018)

தி.மு.க கூட்டணியில் ’மல்லுக்கட்டு’ - தங்க தமிழ்ச்செல்வன் கலகல

தி.மு.க கூட்டணியில் இப்போதே மல்லுக்கட்டு தொடங்கிவிட்ட நிலையில், தொகுதிப் பங்கீட்டின்போது பெரிய குழப்பம் ஏற்படும் என தங்க தமிழ்ச்செல்வன் கிண்டலாகத் தெரிவித்தார்.

தங்க தமிழ்ச்செல்வன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் நெல்லையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா அரசு மக்கள் நலனைக் கவனிக்காமல் அதிகாரப் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக மக்களிடம் வெறுப்பைச் சந்தித்து வருகிறது. 

மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவை நமது நாட்டுக்கு ஏற்புடையவை அல்ல. அதனால் அவற்றை மக்கள் விரும்பவில்லை. மத்திய அரசின் தவறான நடவடிக்கைகள் காரணமாக பா.ஜ.க, 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். அத்துடன், விரைவில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பின்னடைவைச் சந்திக்கும். 

தமிழக முதல்வர் எங்களைக் கட்சியில் இருந்து நீக்கினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார். அதிகாரத்தின் உச்சியில் இருந்துகொண்டு ஆணவப் போக்குடன் செயல்படும் அவர் மத்திய அரசிடம் மட்டும் மண்டியிட்டுக் கிடக்கிறார். மத்திய அரசை எதிர்ப்பதில் மட்டும் ஆளுமையை வளர்க்காதது ஏன் என்பது புரியவில்லை. இந்த ஆட்சியாளர்கள் மீது தமிழக மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

கஜா புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு 4 மாவட்டங்கள் நிலைகுலைந்து இருக்கும் நிலையில், அது பற்றி பிரதமர் வாயே திறக்கவில்லை. புயல் பாதிக்கு குறித்து பிரதமர் நேரில் வந்து பார்வையிட்டு இருக்க வேண்டும். தமிழக அரசு புயல் சேதத்துக்கு 15,000 கோடி ரூபாய் கேட்டிருக்கிறது. உண்மையில் 45,000 கோடி ரூபாய் தேவைப்படும் சூழலில், குறைவான தொகையை தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால், அதையும் மத்திய அரசு கொடுக்காமல் வெறும் 350 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறது. 

தமிழக மக்களை மத்திய அரசு மதிக்கவில்லை. இதற்குச் சரியான தீர்வை வரும் நாடளுமன்றத் தேர்தலின்போது தமிழக மக்கள் கொடுப்பார்கள். திமுக கூட்டணியில் குழப்பங்கள் நீடிக்கின்றன. தேர்தல் சமயத்தில் தொகுதிப் பங்கீட்டின்போது இதை விடவும் பெரிய மல்லுக்கட்டு ஏற்படும். நாங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் தெளிவான மனநிலையுடன் மக்களைச் சந்தித்து வெற்றியைக் கைப்பற்றுவோம்’’ எனத் தெரிவித்தார்.