வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (09/12/2018)

நெல்லையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 100 கிலோ அல்வா பறிமுதல்! - அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை மாநகரில்; உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ அல்வா உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து அழித்தனர். 

சுகாதாரமற்ற அல்வா பறிமுதல்

நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் கடைகளில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். 

அந்த சோதனையின் போது சுகாதாரமற்ற உணவு பண்டங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட நாள்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட அல்வா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காலாவதியான தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானப் பாட்டில்களும் பொதுமக்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

இதுபற்றி பேசிய உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்குமார்,``நெல்லை பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்குவதற்குப் பதிலாகத் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினோம். அதில்,100 கிலோ அல்வா, 50 கிலோ வடை, 25 கிலோ எடையுள்ள பண்டங்கள், குளிர்பானப் பாட்டில்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. காலாவதியான உணவுப் பண்டங்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டவை என அனைத்தையும் கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தோம். 

பேருந்து நிலையத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் தரமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். உணவுப் பொருட்களின் தரம் குறித்து சிறிய அளவில் சந்தேகம் ஏற்பட்டால் கூட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். பொது மக்களின் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்