வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (09/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (09/12/2018)

`மின்சாரம் கொண்டு செல்வதற்கு விவசாயிகளை பலிகடா ஆக்குவதா?’ - ஜி.கே.மணி கேள்வி!

வெளிமாநிலங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக, தமிழக விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே மணி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜி.கே.மணி

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித்தலைவர்  ஜி.கே மணி கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விவசாயிகளின் விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன. ஆனால் அதிகாரிகளோ காவல்துறையை தூண்டிவிட்டு, போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை விரட்டியடித்து நிலங்களை கையகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி உயர்மின் கோபுரங்களை அமைக்க விளை நிலங்களில் 40 மீட்டர் அகலத்துக்கும் நிலம் கையகப்படுத்தப்படுவதால் அந்த நிலத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்துபோய்விடும். அதைவிடக் குறிப்பாக உயர்மின் கோபுரங்களின் அருகில் வசிக்கும் மக்களுக்கு உடல்நலக் குறைவும், உயிர் சேதங்களும்கூட ஏற்படும் அபாயம் உண்டு.

நாட்டுக்கு தேவையான வளர்ச்சிச் திட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் எதிர்க்காது. ஆனால், விவசாயிகளுக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற வளர்ச்சி திட்டங்களைத்தான் நாங்கள் வேண்டாம் என்கிறோம். கூடுதல் செலவுகள் ஆனாலும் பரவாயில்லை. உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை நிறுத்திவிட்டு, நிலத்துக்கு அடியில் கேபிள்கள் மூலமாக மின்பாதைகளை அமைத்துச் செல்லவேண்டும். வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மின்சாரத்தைக் கொண்டுபோவதற்காக, தமிழக விவசாயிகளை பலிகடா ஆக்கக்கூடாது.

அதேபோல டெல்டா மாவட்டப் பகுதிகள் அனைத்தும் காஜா புயலால் மிகப்பெரிய அளவில் சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. அந்த மாவட்டங்கள் அனைத்தும் விரைவாக மீண்டுவர மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை செய்தாக வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை ஆய்வு நடத்த அனுமதித்திருக்கும் மத்திய அரசை மிகவும் வன்மையாக கண்டிக்க வேண்டியிருக்கிறது. காவிரியில் என்றைக்குமே தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். அதேசமயம் நம் தமிழகத்தில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் உள்ளிட்ட அத்தியாவசிய நீராதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பேசினார்.